புதுடெல்லி: ஆஸ்திரியா பிரதமர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 14-ம் தேதி இந்தியா வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இன்று உலக நாடுகள் அனைத்தும் மிகவும் தீவிரமான மற்றும் பதற்றமான சூழலைக் கடந்து கொண்டிருக்கின்றன.
ராணுவ மோதல்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை இந்தியாவும் ஆஸ்திரியாவும் ஒப்புக்கொள்கிறது. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலையான, நீடித்த மற்றும் உறுதியான அமைதி ஏற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவில் ஒரு புதிய பொற்காலம் தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.