புதுடெல்லி: பேஸ்புக்கில் இருந்து பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தவறு நடந்துவிட்டதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) டெல்லியில் அண்மையில் போராட்டம் நடத்தினர். அப்போது, பிரதமர் மோடி ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டார். அதில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர்களுக்கு அவர் வாக்குறுதி அளித்தார்.
இந்த வீடியோ, முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு, பின்னர், பேஸ்புக்கில் பகிரப்பட்டது. ஆனால், பேஸ்புக்கில் பிரதமரின் வீடியோ சில மணித்துளிகளில் நீக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்ததையடுத்து, உடனடியாக வீடியோ மீண்டும் இடம்பெற்றது. தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக வீடியோ நீக்கப்பட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்தது. ஆனால், இதை மத்திய அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும் பாஜக எம்பியுமான நிஷிகாந்த் துபே,‘‘140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக விளங்கும் பிரதமரின் வீடியோவை நீக்கியது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இது கடும் கண்டனத்துக்கு உரியது. இதுதொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூகர்பெர்க் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் வழக்குப் பதிவு செய்யப்படும்’’ என்றார்.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் சர்வதேச பொது விவகாரங்கள் பிரிவு தலைவர் ஜோயல் கப்லன் தலைமையிலான உயர்மட்டக் குழு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (மெய்டி) செயலாளர் எஸ்.கிருஷ்ணனை நேற்று சந்தித்தது். அப்போது பிரதமரின் வீடியோ நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
தவறு நடந்ததை ஒப்புக் கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், பிரதமரின் வீடியோ பேஸ்புக்கில் நீக்கப்பட்டதற்கான காரணங்களை மெட்டா அதிகாரிகள் விளக்கினர். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் நேற்று சந்தித்து விளக்கம் அளித்தனர்.
மன்னிப்பு கேட்ட ஜூகர்பெர்க்: முன்னதாக குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள், டீப்ஃபேக் உள்ளடக்கம் மற்றும் தளத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட தவறுகளுக்காக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் மன்னிப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.