இந்தியா

மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை: பள்ளியில் இலவச நாப்கின் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை ஆகும். எனவே, அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள வேண்டும். மாதவிடாய் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரி காங்கி ரஸ் மூத்த தலைவர் ஜெய தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு இந்த மனுவை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

          

தண்ணீர் வசதியுடன் கழிப்பறை: ஊரக, நகரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசு களும் உறுதி செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் அல்லது புதிதாக கட்டப்படும் கழிப்பறைகள் மாற்றுத் திறன் மாணவிகளும் பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி கழிப்பறைகளிலும் சோப்பு, தண்ணீர் இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஊரக, நகர்ப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மக்கும் தன்மை கொண்ட (பயோடிகிரேடபிள்) நாப்கின்களை மாணவிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். நாப்கின் வழங்க இயந்திரங்களை நிறுவலாம்.

மாணவிகள் தங்களது உள்ளாடைகள், சீருடைகள், நாப்கின்களை மாற்றிக் கொள்ளும் வகையில், பள்ளி வளாகங்களில் மாதவிடாய் நல மேலாண்மை பகுதிகளை அமைக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை: பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள வேண்டும். இதற்காக பள்ளி வளாகங்களில் உள்ள ஒவ்வொரு கழிப்பறையிலும் மூடப்பட்ட நிலையில் உள்ள குப்பைத் தொட்டிகள் வைத்து உரிய முறையில் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாதவிடாய் என்பது வெட்கப்படுவதற்கான காரணமாக இருக்கக் கூடாது. அதுபற்றிய பேச்சுகள் எப்போதும் காதில் ரகசியம் பேசுவதாக இருக்கக் கூடாது. அதுகுறித்த அறிவியல் பார்வையை மாணவர்கள் பெற வேண்டும்.

மாணவர்களுக்கும் விழிப்புணர்வு: மாதவிடாய் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாதவிடாய் சுகாதாரம், தூய்மை தொடர்பான விழிப்புணர்வில் ஆண்களின் பங்கும் அவசியமாகிறது.

சானிட்டரி நாப்கின்களை வாங்க முடியாத சிறுமிகள் காகிதங்கள், துணி, டிஷ்யூ பேப்பர் போன்ற சுகாதாரமற்ற பொருட்களை பயன்படுத்த நேரிடுகிறது. இதன்காரணமாக, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு மாணவிகளுக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைப்பேறு பாதிக்கப்படும் சூழலும் ஏற்படும். எனவே, இதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் குறித்த அச்சம் காரணமாக ஏராளமான சிறுமிகள் பள்ளிக்கு வருவதை தவிர்க்கின்றனர். அவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

இலவச ஆரம்பக் கல்வி என்பது பெண் குழந்தைகளுக்கான செலவினங்களை உள்ளடக்கியதே. குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் சமமாக கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT