மாயாவதி
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.
சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்விரு கட்சிகளும் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தன. ஆனால், குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. எனினும், 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இதில், உ.பி.யில் ஆளும் பாஜகவை வெற்றிகரமாக வீழ்த்தி, சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 எம்.பி.க்களைப் பெற்றன. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 33, அதன் கூட்டணிக் கட்சிளுக்கு 3 இடங்கள் கிடைத்தன. பாஜக 41.37 சதவீத வாக்குகள் பெற்றது. சமாஜ்வாதி 33.59 மற்றும் காங்கிரஸ் 9.46 சதவீத வாக்குகள் பெற்றன.
பாஜகவை விட சமாஜ்வாதியும், காங்கிரஸும் அதிக வாக்குகளைப் பெற்றதால் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் இணைய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. இதுகுறித்து அகிலேஷ் கூறும்போது, ”2027 தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளுடனான இணக்கம் தொடரும். அப்போது முக்கியக் கேள்வி வெற்றியாகத் தான் இருக்குமே தவிர தொகுதிகள் அல்ல” என்றார்.
மேலும், கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்த்தால், பாஜக.விடம் இருந்து ஆட்சியை பறித்து விடலாம் என்று அகிலேஷும் ராகுலும் கருதுகின்றனர். இதையடுத்து, 2 கட்சிகளின் சார்பிலும் உ.பி.யில் 5 முறை முதல்வராக இருந்த மாயாவதியை சந்திக்க 2 நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்தார்.
உ.பி. பாராபங்கி எம்.பி. தனுஜ் புனியாவுடன் கட்சியின் தலித் பிரிவு தலைவர் ராஜேந்தர் பால் கவுதம் உள்ளிட்ட 4 பேரை கார்கே அனுப்பி வைத்தார். ஆனால், லக்னோவில் உள்ள மாயாவதி வீட்டுக்கு சென்றவர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியாமல் திரும்பினர். சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதிக்கு அகிலேஷ் ஏற்கெனவே தகவல் அனுப்பி இருந்தார்.
அதற்கும் மாயாவதி மறுப்பு தெரிவித்து விட்டதாகத் தகவல்கள் வெளியானது. ஏனெனில், ”பகுஜன் சமாஜ் வாக்குகள் கூட்டணிக் கட்சிகளுக்கு செல்கின்றன. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் (சமாஜ்வாதி, காங்கிரஸ்) வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைப்பதில்லை” என்று மாயாவதி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருந்தார்.
மாயாவதியின் இந்தக் கருத்தை முழுமையாக ஏற்க முடியாது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். தற்போது மக்களவையில் மாயாவதி கட்சிக்கு எம்.பி.க்கள் இல்லை. ஆனால், 2019-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தபோது, 10 எம்.பி.க்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்தனர். அதேநேரத்தில் 2014, 2024 மக்களவைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட மாயாவதிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.