மத்திய பிரதேசத்தின் ரத்லம் நகர் அருகே சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். படம்: பிடிஐ

 
இந்தியா

ம.பி.யில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - நடந்தது என்ன?

68 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேசத்​தில் திரு​வனந்​த​புரம் - டெல்லி ராஜ்​தானி எக்ஸ்​பிரஸ் ரயி​லில் நேற்று அதி​காலை தீ விபத்து ஏற்​பட்​டது. இ​தில் 68 பயணி​கள் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர்.

கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் இருந்து டெல்​லி​யின் ஹஸ்​ரத் நிஜா​முதீன் ரயில் நிலை​யத்​துக்கு ராஜ்​தானி எக்​ஸ்​பிரஸ் ரயில் கடந்த 15-ம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்​பட்​டது. கேரளா, கர்​நாட​கா, கோவா, மகா​ராஷ்டி​ரா, குஜ​ராத் ஆகிய மாநிலங்களைக் கடந்து சென்ற ரயில், நேற்று அதி​காலை 3.45 மணிக்கு மத்​திய பிரதேச மாநிலத்​தின் ரத்​லம் நகரில் இருந்து புறப்​பட்​டது.

லூனி ரிச்​சா - விக்​ரம்​கர் அலோட் பகு​தி​களுக்கு இடையே அதி​காலை 5.15 மணிக்கு ரயில் வந்​த​போது பி-1 பெட்​டி​யில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. ரயில் பெட்டி தீப்பிடித்து எரிவதை பார்த்த கார்டு உடனடி​யாக ஓட்​டுநர்​களுக்கு தகவல் கொடுத்​தார். உடனடி​யாக ரயில் நிறுத்​தப்​பட்​டது. ரயி​லில் இருந்த ஆர்​பிஎப் போலீ​ஸார் விரைந்து செயல்​பட்டு பி-1 பெட்​டி​யில் இருந்த 68 பயணி​களை 15 நிமிடங்​களுக்​குள் கீழே இறக்​கினர். விரை​வாக செயல்​பட்​ட​தால் பயணி​கள் அனை​வரும் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

அடுத்த 10 நிமிடங்​களுக்​குள் பி-1 பெட்டி முழு​வதும் கொழுந்​து​விட்டு எரிந்​தது. சிறிது நேரத்தில், அரு​கில் உள்ள சரக்குப் பெட்​டிக்​கும் தீ பரவியது. மத்​திய பிரதேச தீயணைப்பு படை வீரர்​கள் விரைந்து வந்து சில மணி நேரம் போராடி தீயை அணைத்​தனர். இதனால் இந்த வழித்​தடத்​தில் ரயில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. இதுகுறித்து ரயில்வே வட்​டாரங்​கள் கூறும்​போது, “ரயில் கார்​டு, ஓட்​டுநர்​கள், ஆர்​பிஎப் போலீ​ஸார் விரைந்து செயல்​பட்​ட​தால் உயி​ரிழப்பு தடுக்​கப்​பட்டுள்​ளது. 68 பயணி​களும் பத்திரமாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். மின் கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டிருப்​பது முதல் ​கட்ட வி​சா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக உயர்​நிலை வி​சா​ரணை நடத்​தப்​படும்” என்​று தெரி​வித்துள்ளன.

SCROLL FOR NEXT