இந்தியா

மார்ச் 31-க்குள் நாட்டில் மாவோயிசம் ஒழிக்கப்படும்: அமித் ஷா மீண்டும் உறுதி

வெற்றி மயிலோன்

கவுகாத்தி: “வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து மாவோயிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 87-வது சிஆர்பிஎஃப் தின அணிவகுப்பில் உரையாற்றிய அமித் ஷா, “ஜம்மு காஷ்மீரில் இப்போது கல்வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. மணிப்பூரில் இன வன்முறையைக் கையாளவும், நாட்டில் மாவோயிஸ்டுகளின் முதுகெழும்பை உடைத்தெறியவும் சிஆர்பிஎஃப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

          

நான் சிஆர்பிஎஃப்-ஐ நம்பி, இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து மாவோயிஸ்ட் பிரச்சினையை ஒழிப்போம் என்று நம்பிக்கையுடன் கூற முடியும். சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரெகுடா மலைகளில் 21 நாள் ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் நடந்தது. இதில் ஏப்ரல்-மே 2025-இல் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், தினமும் 15 லிட்டர் தண்ணீர் வியர்வையில் வீணாகும்போது, ​​சிஆர்பிஎஃப் வீரர்கள், மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து மலையை விடுவிப்பதற்காக, மாவோயிஸ்டுகளின் கோட்டையை இடித்துத் தள்ளுவதற்காக, தீக்காயங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.

10-11 ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம், மாவோயிசம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி ஆகிய முக்கிய பிரச்சினைகள் இருந்தது. இந்த மூன்று மையங்களும் இப்போது அமைதி மற்றும் முன்னேற்றத்தின் மையங்களாக மாறிவிட்டன.

ஒரு காலத்தில் குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச் சூடுகள், முற்றுகைகள் மற்றும் அழிவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த மூன்று பகுதிகளும் இன்று நாட்டின் வளர்ச்சியின் முக்கியமான ஒரு பகுதியாகும். வளர்ச்சிக்கான ஒரு இயந்திரமாக மாறியதன் மூலம், அவர்கள் முழு நாட்டின் வளர்ச்சியையும் இயக்க பாடுபடுகிறார்கள்

சிஆர்பிஎஃப்-ன் பங்களிப்புகள் இல்லாமல் அத்தகைய அமைதி சாத்தியமில்லை. இதற்காக வடகிழக்கில் 700 சிஆர்பிஎஃப் வீரர்களும், நக்சல் பகுதிகளில் 780 வீரர்களும், ஜம்மு காஷ்மீரில் 540 வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்த தியாகங்கள் இல்லாமல், இன்று இந்த மூன்று முக்கிய இடங்களையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது சாத்தியமில்லை.

சிஆர்பிஎஃப்-இன் 86 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக, அதன் நிறுவன தின அணிவகுப்பு வடகிழக்கில், அசாமில் நடத்தப்படுகிறது. இது நம் அனைவருக்கும், முழு வடகிழக்குக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.

அரசியலமைப்பின் 370-வது பிரிவின் விதிகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு - காஷ்மீரில் ஒரு தோட்டா கூட சுட வேண்டிய அவசியமில்லாமல் போனது. அதை உறுதி செய்வதில் சிஆர்பிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசாங்கம் வழங்கிய மார்ச் 31 காலக்கெடுவுக்குள் நாட்டிலிருந்து மாவோயிசம் ஒழிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT