புதுடெல்லி: பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால், பெண்களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்டார்கள் என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொது நல மனுவை தள்ளுபடி செய்தது.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த பொதுநல மனுவில், மாதவிடாயின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மாதவிடாய் விடுப்புடன் கூடிய ஊதியமும், மாணவிகளுக்கு விடுமுறையும் அளிக்கும் கொள்கை மற்றும் உரிய சட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று சைலேந்திர மணி திரிபாதி கோரியிருந்தார்.
இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்சத் ஆஜராகி, மாதவிடாய் விடுப்பு அளிப்பது கர்நாடகம், ஒடிசா, கேரளத்தில் நடைமுறையில் உள்ளது என வாதிட்டார். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் எந்தப் பெண்ணும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை. மாதவிடாய் விடுப்பு அளிக்க உரிமை கோருவது மகளிரின் வளர்ச்சிக்கு எதிரானதாக அமையும். தாமாக முன்வந்து விடுமுறை அளித்தால் அது நல்லது. ஆனால், மாதவிடாய் விடுமுறையை அளிப்பதை கட்டாயமாக்க கோரி சட்டம் இயற்றினால், மகளிருக்கான வேலைவாய்ப்பை பாதிக்கும்.
பெண்களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்டார்கள். நீதித்துறை உள்ளிட்ட எத்துறையிலும் அவர்களுக்கு பணி வழங்கப்படாது. இந்த விவகாரத்தில் மனுதாரர் அளித்துள்ள கோரிக்கை தொடர்பாக உரிய அமைப்பு முடிவெடுக்க அனுமதி அளித்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.