அனந்தபூர்: ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ராப்தாடு மண்டலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென இளைஞர் ஒருவர் எலக்ட்ரிக் ரம்பத்துடன் 10-ம் வகுப்பறைக்குள் புகுந்தார். அங்கிருந்த 15 வயது மாணவியை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இதில் படுகாயமடைந்த அந்த மாணவியை அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞர் தாக்கியபோது தடுத்த மற்றொரு மாணவியும் காயமடைந்து, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்துப் பள்ளி நிர்வாகம் ராப்தாடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கொலை முயற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட ரம்பத்தை பறிமுதல் செய்தனர்.
போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்ய முயன்ற நபர் ஹேமந்த் என்பதும், அவர் மாணவிக்கு உறவினர் என்பதும் தெரியவந்தது. தன்னைக் காதலிக்கும்படி ஹேமந்த் வற்புறுத்திய நிலையில் மாணவி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ஹேமந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.