மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
தேர்தல் ஆணையத்தை பாஜக இயக்குகிறது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் அம்மாநில அரசியல் கட்சிகளுக்கு அண்மையில் ஓர் அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் பாஜகவின் முத்திரையிடப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் ஆணைய அறிக்கையில் பாஜக முத்திரை இருப்பது மிகவும் புதுமையாக இருக்கிறது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் ஒரே முத்திரையை பயன்படுத்துகிறதா” என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாஜக அலுவலகத்தில் இருந்து செயல்படுகிறார்களா? பாஜகவின் முத்திரை, தேர்தல் ஆணையத்துக்கு எவ்வாறு கிடைத்தது” என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பவானிபூரில் நேற்று கூறியதாவது: பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தை பாஜகவே இயக்குகிறது. தேர்தல் ஆணைய அறிக்கை மூலம் இந்த உண்மை வெட்டவெளிச்சமாகி உள்ளது.
எழுத்தர் பிழை காரணமாக தவறு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. இதன் பின்னால் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கேள்விக்குரியதாக இருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.