மம்தா பானர்ஜி

 
இந்தியா

நந்திகிராம், ரெஜிநகர் இடைத்தேர்தலில் மம்தா போட்டியில்லை: புதிய அரசியல் கூட்டணிக்கு முயற்சி

ஆர்.ஷபிமுன்னா

கொல்கத்தா: 15 ஆண்டுகால ஆட்சியை இழந்த திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) நிறுவனர் மம்தா பானர்ஜி (71), இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்கால வியூகமாக அவர் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க முயல்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இருமுக்கிய தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் அக்டோபர் 6-ல் நடைபெற உள்ளது.

இவற்றில் நந்திகிராம், முதல்வர் சுவேந்து அதிகாரி வென்ற இருதொகுதிகளில் ஒன்று. இங்கு பாஜகவின் சுவேந்துவிடம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா தோல்வி அடைந்தார்.

மம்தா கட்சியிலிருந்து விலகிய ஹுமாயுன் கபீர், ஆம் ஜனதா உனையன் சார்பில் இரண்டு தொகுதிகளில் வென்றிருந்தார். அதில் ஒன்றான ரெஜிநகரை அவர் ராஜினாமா செய்ததால் அங்கும் இடைத்தேர்தல்.

இரண்டிலுமே முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இதனால், முதல்வர் சுவேந்து, “பாஜக அரசு பக்கம் தங்கி அதன் பலன்களை பெற முஸ்லிம்கள் விரும்புகிறார்களா? இல்லையா? என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், முஸ்லிம்களின் பேராதரவில் 15 வருடங்கள் ஆட்சி செய்த மம்தா, இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. இவர், போட்டியிடாமல் விலகி இருப்பது அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இருந்தபோதிலும், தேர்தலில் போட்டியில் விலகும் அவரது முடிவு மாநிலத்தின் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

தன் தோல்வியால் துவண்ட 71 வயதான மம்தா இப்போது தனது கவனத்தை கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும் செலுத்த விரும்புகிறார்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி முயற்சி:

மம்தா 1998-ல் பிரிந்து வந்த காங்கிரஸுடனும், தனது கடும் எதிரிகளான கம்யூனிஸ்டுகளுடனும் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளார். ஏனெனில், இப்போது, மோசடி, நிதி முறைகேடு, லஞ்சம், கட்டாயப் பணம் பறித்தல் மற்றும் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் திரிணமூல் கட்சியைச் சூழ்ந்துள்ளன.

அதே வேளையில், திரிணமூலின் அதிகாரத்தைக் கைப்பற்ற அக்கட்சியின் பல்வேறு பிரிவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால் சிஎம்சி நிறுவனர் மம்தா இடைத்தேர்தலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்.

தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி கட்சியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதை பெரும்பாலும் இயலாமையுடன் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே அவர் காணப்படுகிறார். கட்சியை விட்டு வெளியேறியவர்கள் வெளிப்படையாகவும், கட்சியில் தொடர்ந்து இருப்பவர்களும் இது குறித்துப் பேசியுள்ளனர்.

இண்டியா கூட்டணியிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மற்றும் மு.க. ஸ்டாலினின் திமுக போன்ற கட்சிகள் தற்போது விலகி உள்ளனர். இருப்பினும், மம்தா பானர்ஜி தன் தனிப்பட்ட நட்பால் அவர்களை 2029 மக்களவைத் தேர்தலுக்கு மீண்டும் இணையச் செய்யக்கூடும் என்று மம்தா நம்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை எதிர்க்கும் பலரும், பானர்ஜியை ஒரு மாற்றுத் தலைவராகப் பார்க்கின்றனர். இண்டியா கூட்டணியை வலுப்படுத்துவதில் மம்தா காட்டும் ஆர்வம், எதிர்க்கட்சிகளின் தேசியத் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவரது உத்தியே எனக் கருதப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தின் இடைத்தேர்தல், மம்தா அணியின் வலிமைக்கும், கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும் அல்லது தேசிய அளவிலான லட்சியங்களை அடைவதற்கும் ஒரு முக்கியச் சோதனையாக அமையும்.

மம்தா பானர்ஜியின் வெற்றியை உறுதி செய்ய அவரை ரெஜினகர் தொகுதியில் போட்டியிட அழைத்தார் கபீர். இந்த தொகுதியில் சுமார் 70 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளமையால் கபீர் வெற்றி பெற்றிருந்தார்.

மம்தா பானர்ஜி நந்திகிராமில் போட்டியிட்டால், அங்கு தங்கள் தரப்பு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என்று டிஎம்சியின் ரிதப்ரதா தலைமையிலான பிரிவினர் உறுதி அளித்தனர். எனினும், மம்தா இவை எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை.

SCROLL FOR NEXT