புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் மற்றும் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உட்பட 7,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்ஐஆர் விவகாரத்துக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். இல்லையெனில் அக்டோபர் 10-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்படும் என்று சிஜேபி அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
58,000 போலீஸார் குவிப்பு
சிஜேபி போராட்டக்காரர்கள் டெல்லியில் குவிவதை தடுக்க கடந்த இரு நாட்களில் 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியின் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மூடப்பட்டன. தகவல் பரிமாற்றத்தை தடுக்க இணைய சேவை துண்டிக்கப்பட்டது. டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்ட போலீஸார், மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 23,000 வீரர்கள் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சூழலில் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் மும்பையில் இருந்து விமானத்தில் நேற்று டெல்லி சென்றனர். காலை 11 மணிக்கு அவர்களின் விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது டெல்லி காவல் துறையின் பெண் அதிகாரிகள் விமானத்தில் நுழைந்து அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவை கைது செய்தனர்.
சிஜேபிக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுத் அவென்யூ பகுதியில் மம்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் கூறும்போது, “அவசர கால நிலையைவிட தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
சிஜேபி போராட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது கேஜ்ரிவாலை போலீஸார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் இருந்து வெளியே வந்தனர். சிஜேபி போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டபோது இரு முன்னாள் முதல்வர்களும் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முக்கிய இடங்களில் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. சுற்றுவட்டார பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பாதுகாப்பு அடுக்குகளைத் தாண்டி ஜந்தர் மந்தர் நோக்கி முன்னேறிய பலர் கைது செய்யப்பட்டு பேருந்து, வேன்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக டெல்லியில் நேற்று 7,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர்.
அபிஜித் பாட்டி காலமானார்
அபிஜித் திப்கேவின் பாட்டி சாவித்ரிபாய் திப்கே (85), மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டம், சந்துக்பிம்ப்ரி கிராமத்தில் உள்ள பூர்விக வீட்டில் வசித்து வந்தார். அவர் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது.