மம்தா பானர்ஜி | கோப்புப் படம்

 
இந்தியா

“எஸ்ஐஆர் உண்மையிலேயே ஆபத்தானதாகிவிட்டது” - மே. வங்கத்தில் பிஎல்ஓ தற்கொலையால் மம்தா அதிர்ச்சி

மோகன் கணபதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவர், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சிறப்பு தீவிர திருத்தம் உண்மையிலேயே ஆபத்தனதாகிவிட்டது என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ரிங்கு தராஃப்தார் என்ற ஆசிரியை, பிஎல்ஓ-வாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பிஎல்ஓ பணியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “மற்றும் ஒரு பிஎல்ஓ கிருஷ்ணா நகரில் இன்று தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிரச்சி அடைந்துள்ளேன். ஆசிரியை ஆன அவர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்? இந்த எஸ்ஐஆர்-க்காக இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்? இந்த செயல்முறையால் நாம் இன்னும் எத்தனை சடலங்களை பார்க்கப் போகிறோம்? உண்மையிலேயே இப்போது இது ஆபத்தானதாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அவர் அந்தக் கடிதத்தில், “மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் மீண்டும் மீண்டும் கவலைகளை ஏற்படுத்தி, அது தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதால், இது குறித்து கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் திட்டமிடப்படாமலும் ஆபத்தான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், முதல் நாளில் இருந்தே அதன் செயல்முறை முடங்கியுள்ளது.

அடிப்படை தயார் நிலை, போதுமான திட்டமிடல், தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல், அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மீதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது. அதிகாரிகளுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படாதது, கட்டாய ஆவணங்கள் குறித்த குழப்பம், வேலை நேரத்தில் பிஎல்ஓ-க்கள் வாக்காளர்களைச் சந்திப்பது ஆகியவை, இந்த நடவடிக்கை முழுவதையும் கட்டமைப்பு ரீதியாக பொருத்தமற்றதாக ஆக்கியுள்ளது.

எனவே, தற்போதைய நடைமுறையை நிறுத்துவது, கட்டாயப்படுத்துவதை நிறுத்துவது, சரியான பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போதைய செயல்முறையை முழுமையாக மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இதை தாமதமின்றி செய்யாவிட்டால், அரசு அமைப்பு, அதிகாரிகள் மற்றும் குடிமக்களுக்கு ஏற்படும் விளைவுகள் மீள முடியாததாக இருக்கும். பொறுப்புணர்வுடனும், மனிதநேயத்துடனும், தீர்க்கமான உணர்வுடனும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT