கொல்கத்தா: நந்திகிராம், ரெஜினகர் சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும், அரூப் ராய் தலைமையிலான அணியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் புல்வெளியில் இரட்டை மலர்கள் சின்னத்துக்கு உரிமை கோரின.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகளும் முறையிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடைத்தேர்தலில் தனித்தனி பெயர் மற்றும் தனித்தனி சின்னங்களுடன் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
இதன்படி, மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு “மம்தா ஆல் இந்தியா திரிணமூல் காங்கிரஸ்” என்ற பெயரும், “கால்பந்து வீரர்” சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரூப் ராய் தலைமையிலான அணிக்கு “டெமாக்ரடிக் திரிணமூல் காங்கிரஸ்” என்ற பெயரும், “அஞ்சல் உறை” சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி கண்டனம்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.
நந்திகிராமில் திரிணமூல் வேட்பாளர் திடீர் விலகல்
மேற்குவங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவை சேர்ந்த முதல்வர் சுவேந்து அதிகாரி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அவர் நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, நந்திகிராம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6-ம் தேதி நடைபெறுகிறது. நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா அணியின் சார்பில், சஞ்சிதா பிரதான் தேய் வேட்பாளராக கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டார். அவர் திடீரென தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியின் வேட்பாளர் மிலன் பிரதான் பழைய கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.