கொல்கத்தா / புதுடெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் நிகழ்ந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறும்போது, “நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் தங்களது நம்பகத்தன்மையை இழந்துவிட்டன. எனவே, தற்போதுள்ள நடைமுறைகள் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்பதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்று நம்புகிறோம். அஜித் பவார் மீண்டும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இணைய திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த மரணம் சந்தேகத்தை எழுப்புகிறது. காலை அவரது மரணச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. ஆளுங்கட்சியில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என்றார் மம்தா பானர்ஜி.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “அஜித் பவார் மக்கள் தலைவர். அவரது மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. மம்தா பானர்ஜியின் கோரிக்கை நியாயமானது. அகமதாபாத்தில் பெரிய விமானம் விபத்துக்குள்ளானதை நாம் பார்த்தோம். இப்போது சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது ஏன் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “முன்னதாகப் பல முக்கியப் பிரமுகர்கள் இதுபோன்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்தின் பின்னணியைக் கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை அவசியம்” என்றார். சிவசேனை (யுபிடி) எம்.பி. அனில் தேசாய் மற்றும் பிஜேடி துணைத் தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா ஆகியோரும் உரிய விசாரணைக்கு வலியுறு்த்தி உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கைக்கு மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அஜித் பவாரின் குடும்பத்தினர் சோகத்தில் இருக்கும் வேளையில், இதுபோன்ற மலிவான அரசியலில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. இறுதிச் சடங்குகள் கூட முடிவதற்குள் மூத்த அரசியல் தலைவரான மம்தா பானர்ஜி இப்படிப் பேசுவது முறையல்ல” என்று அவர் சாடியுள்ளார்.