திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி

 
இந்தியா

“மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அரசு அகற்றப்படும்” - மம்தா பானர்ஜி

வேட்டையன்

கொல்கத்தா: “வரும் நாட்களில் மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக அரசு அகற்றப்படும்” என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை இழந்தது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பங்கேற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியிருந்தார். அப்போது அவர் கூறியது:

“மாநிலத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள பாஜக அரசு, சிறுபான்மையின மக்களை குறிவைத்துள்ளது. நடைபாதை வியாபாரிகளின் கடைகள் புல்டோசர்களால் இடிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த அரசு நமது அரசியலமைப்பை சிதைத்துக் கொண்டுள்ளது.

அதேபோல வரும் நாட்களில் மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அகற்றப்படும்” என மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி பேசியது: “தெற்கு கொல்கத்தாவில் உள்ள எனது வீட்டை இடிக்க போவதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்.

நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள். என்ன நடந்தாலும் பாஜகவுக்கு எதிரான செயல்பாட்டில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

நமது மாநிலம் எத்தனையோ முதல்வர்களை பார்த்துள்ளது. ஆனால், இப்போதைய முதல்வரை போல் அவர்கள் யாரும் இருந்தது இல்லை. கேமராவுக்கு முன் பணம் பெற்றவர்தான் இன்றைய முதல்வர்” என்று அவர் தெரிவித்தார்.

2014-ல் செய்தி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில் இப்போதைய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை குறிப்பிட்டு அபிஷேக் பானர்ஜி, முதல்வர் சுவேந்து அதிகாரியை விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT