கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக மிரட்டியதாகக் கூறி பாஜக அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “மம்தா பானர்ஜி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத வார்த்தைகளால் மத்திய உள்துறை அமைச்சரை மிரட்டியுள்ளார். நாங்கள் அதைப் பார்த்தோம்.
‘நீங்கள் (அமித் ஷா) ஒரு ஹோட்டலில் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால், உங்களால் ஹோட்டலை விட்டு வெளியே வர முடியாது. நாங்கள் உங்களை ஹோட்டலில் இருந்து வெளியே வர அனுமதித்ததால் நீங்கள் அதிர்ஷ்டசாலி’ என்று மம்தா கூறினார்.
இது மத்திய உள்துறை அமைச்சருக்கு மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். இது ஹிட்லர் ஆட்சியும் சர்வாதிகாரமும் ஆகும்.
மேற்கு வங்கத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த தேர்தலின்போது ஊடுருவல்காரர்களால் எங்கள் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் சுமார் 300 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டனர். 3,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. நாடு முழுவதற்கும் வழிகாட்டிய ஒரு மாநிலத்தில் இதுபோல நடக்கிறது. மேற்கு வங்கம் இப்போது மம்தா பானர்ஜியால் அழிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.