புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடைபெறுகிறது.
இப்பணி பாரபட்சமான முறையில், அரசியல் உள்நோக்கத்துடனும் நடைபெறுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேற்று சந்தித்துப் பேசினர்.
இக்குழுவில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மற்றும் எஸ்ஐஆரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இடம்பெற்றிருந்தனர். அப்போது, தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரும் உடன் இருந்தனர். எஸ்ஐஆர் பணி குறித்து மம்தா குழுவினர் புகார் தெரிவித்தனர்.
அப்போது, ஞானேஷ் குமார் பதில் அளிக்க முற்பட்டபோது, திரிணமூல் காங்கிரஸார் குறுக்கிட்டுப் பேசி உள்ளனர். இதனிடையே, மம்தா தலைமையிலான குழுவினர் பாதியிலேயே வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் மம்தா கூறும்போது, “எஸ்ஐஆர் விவகாரத்தில் உங்களை நம்புகிறேன் என தலைமைத் தேர்தல் ஆணையரிடம் நான் கூறினேன். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். அதனால்தான் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினோம்” என்றார்.
இது குறித்து ஆணைய வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இதர ஆணையர்கள் மம்தா பானர்ஜியின் கேள்விகளுக்கு மிகவும் கனிவான முறையிலேயே பதிலளித்தனர். சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்படும் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், தலைமைத் தேர்தல் ஆணையரின் விளக்கத்தை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி, ஆணையத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவர் அங்கிருந்த மேஜையைத் தட்டி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துகொண்டு அவர் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.