மம்தா பானர்ஜி |கோப்புப் படம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தலின் போது மத்தியப் படையினர் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அத்துமீறி வருகின்றனர். இதனால், மாநிலத்தில் எந்த வாக்குச்சாவடியும் பாதுகாப்பாக இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கொல்கத்தா உள்ளிட்ட 142 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் வாக்களித்த பிறகு, ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் மம்தா பானர்ஜி கூறியதாவது: மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து தடியடிச் சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரை மத்தியப் படையினர் தடுத்து வைத்துள்ளனர். எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மாநிலக் காவல்துறை பணியில் அமர்த்தப்படவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளையும் மத்தியப் படையினரே தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மக்களைத் துன்புறுத்துவதுதான் இவர்களது வேலையா? இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதற்கிடையில், முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொகுதியான டைமண்ட் ஹார்பரில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பாஜக புகார் தெரிவித்தது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஆனால், தோல்வி பயத்தால் பாஜக வீண் வதந்திகளைப் பரப்புவதாக திரிணமூல் காங்கிரஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.