இந்தியா

காந்தியின் கடிதம், பொருட்கள் ரூ.16.2 கோடிக்கு விற்பனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ம​காத்மா காந்​தி​யின் கடிதம், அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்​தில் ரூ.16.20 கோடிக்கு விற்​பனை​யாகி புதிய சாதனை படைத்​துள்​ளது.

மகாத்மா காந்​தி​யின் நெருங்​கிய நண்​ப​ராக​வும், சுதந்​திரப் போராட்ட வீர​ராக​வும் திகழ்ந்​தவர் ஆனந்த் டி. ஹிங்​கோ​ரானி. இவருக்கு காந்​தி​யடிகள் உண்​மை, அகிம்​சை, சேவை உள்​ளிட்ட பல்​வேறு தலைப்​பு​கள் குறித்த 688 பிர​தி​களை தனது கைப்பட கடிதமாக எழுதி அனுப்பி உள்​ளார்.

குறிப்​பாக, ஹிங்​கோ​ரானி​யின் மனைவி வித்யா மறைந்த பின்​னர், 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக காந்​தி​யால் தினசரி எழுதப்​பட்ட இந்​தக் கடிதங்கள், ‘இன்​றைய சிந்​தனை’ என்ற பெயரில் புத்​தக​மாகத் தொகுக்​கப்​பட்​டன. இருவருக்​கும் இடையி​லான நெருக்​க​மான உறவைப் பதிவு செய்​துள்ள முக்​கிய​மான ஆவணங்​களில் ஒன்​றாக இது கருதப்​படு​கிறது.

சாஃப்​ரன் ஆர்ட் நிறு​வனம் சார்​பில், ‘காந்​தி: ஆனந்த் டி ஹிங்​கோ​ரானி​யின் தொகுப்​பிலிருந்​து’ என்ற பெயரில் நடை​பெற்ற ஏலத்​தில், இந்​த கடிதங்கள் அடங்​கிய 86 தொகுப்​பு​கள் ரூ.16.20 கோடிக்கு விற்​பனை​யாகி சாதனை படைத்​துள்​ளன. ஏலத்​தில் விற்​பனை​யான இந்​திய வரலாற்று ஆவணம் ஒன்​றுக்கு கிடைத்த அதி​கபட்ச தொகை இது​வாகும்.

இதுகுறித்​து, சாஃப்​ரன் ஆர்ட் நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் தினேஷ் வாசி​ராணி கூறுகை​யில், “ஆனந்த் டி. ஹிங்​கோ​ரானி சேகரிப்பை ஏலத்​துக்​குக் கொண்டு வந்​து, காந்​தி​யின் வாழ்க்கை மற்​றும் சிந்​தனை​களின் குறிப்​பிடத்​தக்க பதிவைப் பகிர்ந்​து​கொள்ள முடிந்​தது பெரு​மை​யாக உள்​ளது. காந்தி பொது​வெளி​யில் வலி​யுறுத்​திய கொள்​கை​களை தனது வாழ்க்​கை​யில் எவ்​வாறு கடைப்​பிடித்​தார் என்​பதை அறிந்​து​கொள்ள இந்​தக் குறிப்​பு​கள் அரிய வாய்ப்பை வழங்​கு​கின்​றன” என்​றார்.

இதுத​விர, ‘கட​வுள் பற்​றிய செய்​தி’ என்ற பெயரில் கடவுள் மற்​றும் பகவத் கீதை குறித்த காந்​தி​யின் சிந்​தனை​களை உள்​ளடக்​கிய கடிதங்​கள் அடங்​கிய தொகுப்பு ரூ.1.68 கோடிக்கு விற்​பனை​யானது. காந்​தி​ தான் பயன்படுத்திய தனிப்​பட்ட பொருட்​களில், ‘பெட்டி சர்க்​கா’ எனப்​படும் பெட்டி வடிவ ராட்​டை​யும், ராட்​டைச் சுழற்​றுவதன் ஆன்​மிக ஒழுக்​கம் குறித்து அவர் எழு​திய இரண்டு கடிதங்​களும் இடம் பெற்​றிருந்​தன.

இந்​தத் தொகுப்பு ரூ.1.02 கோடிக்கு விற்​பனை​யானது. காந்தி எழு​திக் கொண்​டிருக்​கும் கையெழுத்​துடன் கூடிய புகைப்​படம் ரூ.78 லட்​சத்​துக்​கும், பொருளா​தார சுதந்​திரம் தொடர்​பான காந்​தி​யின் கடிதங்​கள், தந்​தி​கள், அஞ்​சல் அட்​டைகள் ரூ.57.60 லட்​சத்​துக்​கும்​ ​விற்​பனை​யானது.

SCROLL FOR NEXT