இந்தியா

மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்: மகாராஷ்டிர அரசு நடவடிக்கை

ஆர்.ஷபிமுன்னா

மும்பை: மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக, மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் வணிக ரீதியான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழியை ஓரளவிற்காவது பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அம்மாநில அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகி இருந்தது. இது, ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் எளிதாக்குவதுமே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் அறிவிக்க்பபட்டது.

இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்துத் துறை நேற்று மாநிலம் முழுவதும் ஒரு சிறப்பு ஆய்வு நடவடிக்கையைத் தொடங்கியது. இதில், 16 கேள்விகள் அந்த ஓட்டுநர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை குழுக்கள் மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனைகளை நடத்தி, 3,995 ஓட்டுநர்களை ஆய்வு செய்தன.

மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர். இவர்களில், 604 ஓட்டுநர்களுக்கு அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான மராத்தி மொழித் திறன் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

மும்பை பெருநகரப் பகுதியைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 4,222 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர்; அவர்களில் 664 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சேர்த்து முதல் கட்டமாக, மராத்தி மொழி குறித்த போதிய அறிவு இல்லாத மொத்தம் 1,268 ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ், மகாராஷ்டிர போக்குவரத்து துறை அலுவலகங்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்கு, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் விளக்கம் அளிக்கையில், “ஓட்டுநர்களிடம் நிர்வாகம் அனுதாபத்துடனான அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்வதற்குப் போதுமான கால அவகாசமும், வாய்ப்பும் வழங்கப்படுகின்றன. இந்த ஆய்வு நடவடிக்கை வரும் செப்.30 வரை தொடரும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். விதிகளைத் தவிர்ப்பதற்கோ அல்லது தப்பிப்பதற்கோ எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படாது” என எச்சரித்துள்ளார்.

இதனிடையே, ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி பயிற்சியை, மகாராஷ்டிர அரசுடன் இணைந்து கடந்த மே 1 முதல் பல பொதுசேவை நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. இதில், மராத்தி அல்லாத சுமார் ஒன்றரை லட்சம் ஓட்டுநர்கள் மராத்தி மொழியைக் கற்றனர். இவர்களில் அதன் இறுதி தேர்வில் 7,750 பேரால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற முடியவில்லை.

மும்பையில் மட்டும் சுமார் 4.5 லட்சம் ஆட்டோக்களும், 60,000 டாக்சிகளும் ஓடுகின்றன. இவை இரண்டு ஷிப்டுகளாக செயல்படுவதால் அதன் ஓட்டுநர்கள் எண்ணிக்கை இருமடங்காகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 1.35 லட்சம் பேர் மராத்தி கற்றுக் கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இந்த பயிற்சிகள் அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT