இந்தியா

“உத்தரப் பிரதேசத்தை முதலீடுகளை ஈர்க்கும் மையமாக யோகி அரசு மாற்றி உள்ளது” - அமித் ஷா

மோகன் கணபதி

நொய்டா: மாஃபியாக்களின் பிடியில் இருந்த உத்தரப் பிரதேசத்தை முதலீடுகளை ஈர்க்கும் மையமாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாற்றி உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடக்கிவைத்து உரையாற்றிய அமித் ஷா, “ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2017-ல் பாஜக இங்கு ஆட்சியை அமைத்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். யோகி அரசு மாநிலம் முழுவதும் மாஃபியாக்களை வெற்றிகரமாக ஒழித்துள்ளது. இது முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி உள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை என்பது பிரதமர் மோடியின் அடையாளமாக மாறி உள்ளது. அவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பொறுப்பேற்றதன் மூலம் கொள்கைகளை வகுப்பதோடு அவை சீராகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதி செய்துள்ளார். இதன்மூலம், இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றி உள்ளார்.

2013-ல் மாநிலத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உத்தரப் பிரதேச அரசு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தது. அப்போது அந்த மாநாட்டை டெல்லியில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, லக்னோவில் நிலவிய சட்டம் - ஒழுங்கு சூழல் காரணமாக எந்தவொரு முதலீட்டாளரும் அங்கு வர விரும்பவில்லை என்பதை உத்தரப் பிரதேச அதிகாரிகள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். அதனால்தான் அவர்கள் அந்த நிகழ்ச்சியை டெல்லிக்கு மாற்ற வேண்டி இருந்தது.

அதே உத்தரப் பிரதேசம் இப்போது அச்சமற்ற மாநிலமாகவும், முதலீடுகளுக்கான மையமாகவும், தேசிய வளர்சசியின் உந்து சக்தியாகவும் மாறி உள்ளது. இந்த மாற்றம் இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் சாத்தியமாகி உள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாகவே உத்தரப்பிரதேசத்தால் இப்போது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவது என்ற லட்சிய இலக்கை நிர்ணயிக்க முடிகிறது.

ஒரு காலத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்தன. அப்போது குற்றம் செய்வதே ஒரு தொழிலாக செழித்து வளர்ந்திருந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உத்தரப் பிரதேசம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய மாற்றம்.

லக்னோவில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதற்கான தன்னம்பிக்கைகூட இல்லாத அதே உத்தரப் பிரதேசம் இன்று முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய மையமாக மாறியுள்ளது. யோகி அரசாங்கம் பதவியேற்ற பிறகு, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நிலவிய ரவுடித்தனத்தை முழுமையாக ஒழித்துவிட்டது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT