அமைச்சர் சத்ய குமார் யாதவ்
ஹைதராபாத்: திருமலையில் பிரசாதங்கள் மற்றும் குடிநீரின் தரத்தை அறிய அதிநவீன இயந்திரத்தை ரூ.3.5 கோடி செலவில் பிரான்ஸ் நாட்டில் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் இறக்குமதி செய்ய உள்ளது.
இது குறித்து ஆந்திர சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலையில் அதிநவீன உணவுப் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 12,000 சதுர அடியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 2 அடுக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக ஆந்திர அரசு கடந்த 2024, அக்டோபர் 8ம் தேதி, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்காக இத்துறை ரூ.23 கோடி மானியம் வழங்கியது. இந்த பரிசோதனை கூடத்தில் 50 அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் செயற்கை நாக்கு மற்றும் மூக்கு இடம்பெறும். பிரசாதத்திற்கு பயன்படும் நெய் உள்ளிட்ட பொருட்களின் சிறு வாசனை வேறுபாட்டைக் கூட இக்கருவி கண்டறிந்து விடும்.
நோய்த்தொற்று கிருமிகள், பூச்சி மருந்து கலப்படம் உள்ளி்ட்டவற்றை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். 200 வகையான பரிசோதனைகளை இந்த இயந்திரம் மேற்கொள்ளும். நெய், முந்திரி, பருப்பு, ஏலக்காய், சர்க்கரை, குடிநீர் என அனைத்து உணவுப் பொருட்களின் தரத்தையும் துல்லியமாக கண்டறியும். இம்மையத்தில் சுகாதார துறையில் இருந்து 40 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இது வரும் மே மாதம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பக்தர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.