புதுடெல்லி: சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போரால் இந்தியாவில் எரிபொருள் நெருக்கடி கவலைக்குரிய விஷயமாகவே நீடிக்கிறது. எனினும், சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. அதேநேரம் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மாற்றாக, சமையலுக்கு மின்சாரம் உள்ளிட்ட இதர எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவது கூடுதல் நலம் பயக்கும்.
தற்போது எந்தவொரு விநியோகஸ்தரிடமும் கையிருப்பு இல்லாத நிலை ஏற்படவில்லை. வீடுகளுக்கான சிலிண்டர் விநியோகம் வழக்கம்போலவே நடைபெற்று வருகிறது. வணிக ரீதியிலான எல்பிஜி விநியோகம் தொடக்கத்தில் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தாலும், தற்போது பகுதி அளவில் சீரமைக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டாளர்கள் படிப்படியாகக் குழாய் வழி இயற்கை எரிவாயுவுக்கு மாற வேண்டும்.
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சுமார் 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சுஜாதா தெரிவித்தார்.