புதுடெல்லி: நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் கிடைப்பதாகவும், ஆனால் எல்பிஜி நிலைமை கவலைக்குரிய விஷயமாகவே உள்ளதாகவும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல் துறையினர் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், வீடுகளுக்கான எல்பிஜி எரிவாயு, வர்த்தக எல்பிஜி எரிவாயு ஆகியவை தொடர்பாக டெல்லியில் அமைச்சகங்களுக்கு இடையே விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, ‘‘அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. எல்பிஜியை பொறுத்தவரை இது எங்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது. எனினும், நாடு முழுவதும் உள்ள 25,000 விநியோகஸ்தர்களில் எவரும் இருப்பு தீர்ந்துவிட்டதாக கூறவில்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம். பீதியில் வாங்குவதை தவிர்க்குமாறு அனைத்து சக குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பெட்ரோல், டீசல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இந்தியா 258 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்பு திறனை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிபபு நிலையங்களும் 100% இயங்கி வருகின்றன. கச்சா எண்ணெய் இருப்பு போதுமான அளவு உள்ளது. பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
சுஜாதா சர்மா | கோப்புப் படம்
நாடு முழுவதும் வீடுகளுக்கு குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) தடையின்றி தொடர்கிறது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் மூலம் வழங்கப்படும் சிஎன்ஜி எரிவாயுவும் தடையின்றி வழங்கப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களைப் பெருவதில் நுகர்வோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக பெரு நகரங்களில் இந்த சிரமம் உள்ளது. இதை சரி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சகம் எடுத்து வருகிறது.
சிஎன்ஜி மூலம் எரிவாயு பெறும் வர்த்தக நுகர்வோர்களும் பிஎன்ஜிக்கு மாறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதற்காக, உள்ளூர் எரிவாயு விநியோக ஏஜென்சிகள் அல்லது டீலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.