புட்டபர்த்தி: புட்டபர்த்தி சத்யசாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அனைவரின் மீதும் அன்பு கொள், சேவை செய் என்பதே புட்டபர்த்தி சத்யசாய் பாபாவின் தாரக மந்திரம் என புகழாரம் சூட்டினார்.
புட்டபர்த்தி சத்யசாய் பாபாவின் நூற்றாண்டு தொடக்க விழா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் வெகு சிறப்பாக நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள விமானம் மூலம் நேற்று காலை புட்டபர்த்திக்கு வந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். அதன் பின்னர், புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திற்கு சென்ற பிரதமர் அங்கு குல்வந்த் ஹாலில் உள்ள சத்யசாய் பாபாவின் மகா சமாதிக்கு சென்று மலர் தூவி பிரார்த்தனை செய்தார்.
இதனை தொடர்ந்து, ஹில் வ்யூ விளையாட்டு அரங்கிற்கு சென்ற பிரதமர், அங்கு பாபாவின் நூற்றாண்டு விழாவில் பாபா படம் அச்சிட்ட ரூ.100 நாணயம், 4 தபால் தலைகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
உலக அன்பின் அடையாளமாக சத்ய சாய்பாபா வாழ்ந்து காட்டினார். உடலளவில் அவர் நம்மிடையே இல்லாவிடினும், அவர் காட்டிய அன்பு நம்மிடையே உள்ளது. சத்ய சாய்பாபாவின் போதனையின் விளைவுகள் நம் நாடு முழுவதும் காணப்படுகிறது. அவரின் பல கோடி பக்தர்கள் அன்பு நெறியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவரின் அன்பு வழி பலரின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. அனைவரின் மீதும் அன்பு கொள், அனைவருக்கும் சேவை செய் என்பதே அவரின் தாரக மந்திரம். இந்த ஒரு சொல் பல லட்சம் பேரை அன்பு வழியில் நடக்க செய்துள்ளது.
மக்களின் நலனுக்காக பாபா பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீருக்காக பல சேவைகளை அவர் செய்துள்ளார். புட்டபர்த்தி எனும் இந்த புண்ணிய மண்ணில் ஏதோ ஒரு மகிமை உள்ளது. சத்யசாய் அறக்கட்டளைகள் அனைத்தும் இதே அன்பு நெறியில் நடக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
மனித கடவுள் சத்யசாய் பாபா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘இந்த பூமி மீது பிறந்த மானிட கடவுள் சத்யசாய் பாபா. நாம் நேரில் கண்ட நடமாடும் தெய்வம் அவர். மானிட சேவையே மகேசன் சேவை என்பதை பாபா செய்து காட்டினார். உலகம் முழுவதும் அன்பை விதைத்துள்ளார். ஆந்திரா, தெலங்கானா, தமிழகத்தில் 1,600 கிராமங்களில், ரூ.550 கோடி செலவிட்டு 30 லட்சம் பேருக்கு அவர் குடிநீர் வசதியை வழங்கியுள்ளார்.
140 நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் அவரின் சத்ய சாய் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு 7 லட்சத்திற்கும் மேலான தன்னார்வ தொண்டர்கள் தாமாக முன் வந்து இலவசமாக பணி செய்கின்றனர். அரசுகளைவிட வேகமாக சத்யசாய் பாபா செயல்களில் இறங்குவார். அவர் காட்டிய வழியில் நாம் நடப்போம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பவன் கல்யாண், சச்சின், ஐஸ்வர்யா ராய், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.