புதுடெல்லி: தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து டிச.9-ம் தேதி மக்களவையில் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது. எனினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்றும் இன்றும் மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நேற்றும் இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இன்று, மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, அவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இன்று மக்களவை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது டிச.8-ம் தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்து மக்களவையில் விவாதம் நடத்தவும், டிச.9-ம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ், "அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் வந்தே மாதரம் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திங்கள்கிழமை வந்தே மாதரம் குறித்த விவாதத்தை அவை மேற்கொள்ளும். பின்னர், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து அவை விவாதிக்கும்" என்று தெரிவித்தார்.
இரண்டு விவாதங்களுக்கும் தலா 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவை எனில் நேரம் நீட்டிக்கப்படும் என்றும் கே.சுரேஷ் தெரிவித்தார். வந்தே மாதரம் குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைப்பார் என்று கூறப்படுகிறது.
சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) என்பது இந்திய தேர்தல் ஆணையம் நடத்தக்கூடியது என்பதால் அந்தப் பொருளில் விவாதம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்றும், எனவே, தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற பரந்த தலைப்பில் விவாதம் நடத்தலாம் என்றும் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது அரசின் எல்லைக்குள் வருவதையும் அவர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.