இந்தியா

“இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகே முடிவு” - திரிணமூல் எம்பிக்கள் விவகாரத்தில் சபாநாயகர் உறுதி

மோகன் கணபதி

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் தங்களை தனி அணியாக அறிவிக்கக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகே அவர் தனது முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அக்கட்சியில் உள்கட்சிப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக சொவன்தேப் சட்டோபாத்யாயை மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 58 எம்எல்ஏக்கள் ரிதப்ரதா பானர்ஜிக்கு ஆதரவாக செயல்பட்டு அவரை எதிர்க்கட்சித் தலைவராக்கினர்.

இதேபோல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 28 எம்பிக்களில் 20 பேர் தனி அணியாக செயல்பட்டு தங்களை இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் (என்சிபிஐ) எம்பிக்களாக அங்கீகரிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இந்தக் கடிதம் தற்போது சபாநாயகர் ஓம் பிர்லாவின் பரிசீலனையில் உள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களுக்கும் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து நேற்று (ஜூன் 16) இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நேற்று மாலையே சபாநாயகரை நேரில் சந்திக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்பியான அபிஷேக் பானர்ஜி, அமலாக்கத் துறை விசாரணையில் இருந்ததால், மற்றொரு எம்.பி.யான கீர்த்தி ஆசாத் சபாநாயகர் அலுவலகம் சென்று விளக்கியுள்ளார். சபாநாயகரை சந்திப்பதற்கு வேறொரு தேதி மற்றும் நேரத்தை அவர் கோரியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி ஆசாத், “எங்கள் தரப்பு கடிதத்தை சபாநாயகரிடம் நாங்கள் அளித்துள்ளோம். உண்மையான திரிணமூல் காங்கிரஸ் மம்தா பானர்ஜிதான் என்பதையும், கட்சி அவருடையதுதான் என்பதையும் அதில் தெரிவித்துள்ளோம். அதிருப்தி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் அளித்துள்ள கடிதம், தவறாக வழிநடத்தக்கூடியது. சுய நலத்துக்காக சிலர் அவ்வாறு கடிதம் கொடுத்துள்ளனர். அவர்கள் எந்தக் கட்சியில் தாங்கள் இணைந்துள்ளதாகக் கூறுகிறார்களோ அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களே இல்லை. அது அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்படாத கட்சி. அதற்கு எந்த அடையாளமும் இல்லை. இது ஜனநாயகம் அல்ல” என தெரிவித்துள்ளார்.

இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி, திரிபுரா மாநிலத்தில் இயங்கி வருகிறது. அதன் அமைப்புச் செயலாளரான ஷாந்தனு தே, பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் தங்கள் கட்சியில் இணைவதை அவர் வரவேற்பதாகவும், இதன்மூலம் கட்சி மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்று அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT