மேசனா: குஜராத் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவியது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் மேசனா மாநகராட்சியில் வார்டு எண் 13-ல் போட்டியிட்ட வரும் பாஜகவின் மாவட்ட அலுவலகத்தில் (கமலம்) சாதாரண உதவியாளராக பணியாற்றியவருமான ரமேஷ் பாய் பெற்ற வெற்றிதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாஜக மாவட்ட அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் வழங்குவது மற்றும் கோப்புகளைப் பராமரிப்பது போன்ற பணிகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவுன்சிலராக அவர் மாறியிருப்பது, வட குஜராத்தில் அடிமட்ட அரசியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
இது குறித்து ரமேஷ்பாய் கூறும்போது "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பணியாற்றுவேன். நான் 28 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராகப் பணியாற்றினேன்" என்றார்.
இந்தத் தேர்தலில், மோர்பி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. இதன்மூலம் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.