புதுடெல்லி: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 ஆண்டுகள் சிறையில் இருந்த இரு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான பிபின் சந்திர கனையாலால் ஜோஷி மற்றும் பிரதீப் ராமன்லால் மோடியா ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி.வரலே அமர்வு முன்பு நேற்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது இருவரும் 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மேல்முறையீட்டு மனுக்களில் சட்ட ரீதியாகவும், உண்மைத் தகவல்கள் அடிப்படையிலும் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இருவரின் ஆயுள் தண்டனையையும் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.