தேஜஸ்வி யாதவ் 
இந்தியா

கேரளாவில் எல்டிஎஃப் ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்யும்: தேஜஸ்வி

வெற்றி மயிலோன்

பாட்னா: கேரள சட்டப்பேரவத் தேர்தலில் எல்டிஎஃப் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “கேரளாவில் எல்டிஎஃப்க்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது; அங்கே எப்போதும் எல்டிஎஃப்-க்கும், யுடிஎஃப்க்கும் இடையேதான் போட்டி இருக்கும். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக, எல்டிஎஃப் அரசாங்கமே ஆட்சியில் இருந்து வருகிறது.

          

ஆளும் எல்டிஎஃப் கூட்டணியுடனான எங்களது உடன்பாட்டின் ஒரு பகுதியாக, பல சட்டமன்ற தொகுதிகளில் ஆர்ஜேடி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. நாங்கள் சுமார் 8 முதல் 9 தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளோம்; இதில் ஆர்ஜேடி கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது

அங்கு நிலவும் சாதகமான அரசியல் சூழலையும், மக்களிடமிருந்து கிடைக்கும் உற்சாகமான வரவேற்பையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இந்த முறை எல்டிஎஃப் அரசாங்கம் ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சக்கீருக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உரையாற்றினார். அவரது இந்தச் செயலை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருந்தார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணியில் ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் முக்கிய போட்டியாளராக உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கடும் களத்தில் இருக்கிறது.

பிஹாரில் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் நிலையில், கேரளாவில் இடதுசாரிகள் அணியில் ஆர்ஜேடி அங்கம் வகிப்பது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT