இந்தியா

“உங்கள் நலனுக்காக, சத்தீஸ்கர் வளர்ச்சிக்காக...” - நக்ஸல்களுக்கு அமித் ஷாவின் வேண்டுகோள்!

மோகன் கணபதி

ஜக்தால்பூர் (சத்தீஸ்கர்): உங்கள் நலனுக்காக, உங்கள் குடும்பத்தினர் நலனுக்காக, சத்தீஸ்கரின் நலனுக்காக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கரை உருவாக்குவதற்கான பயணத்தில் இணையுங்கள் என்று நக்ஸல்களுக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஸ்தர் ஒலிம்பிக்ஸ் 2025-ன் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘அன்னை தண்டேஸ்வரி தேவியிடம் எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனை மட்டுமே இருக்கிறது. சத்தீஸ்கர் முழுவதும் நக்சலிசத்தில் இருந்து விடுபட வேண்டும்; அனைத்து பழங்குடி மக்களுக்கும் அன்னையின் ஆசீர்வாதம் பூரணமாக கிடைக்க வேண்டும் என்பதே அது.

கடந்த ஆண்டு நடந்த பஸ்தர் ஒலிம்பிக்ஸ் போட்டியின்போதும் நான் வந்திருந்தேன். இந்த ஆண்டும் வந்துள்ளேன். அடுத்த ஆண்டும் வருவேன். அப்போது, முழு நாடும் சிவப்பு பயங்கரவாதத்தில் இருந்து விடுபட்டிருக்கும். நக்ஸல் இல்லாத சத்தீஸ்கர் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பஸ்தரை நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடி பகுதியாக மாற்ற நாங்கள் பாடுபடுவோம். இதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் முதல்வர் விஷ்ணு தியோ சிங் தலைமையிலான மாநில அரசும் தோளோடு தோள் சேர்ந்து செயல்படுகின்றன.

சரணடைந்த நக்ஸல் இளைஞர்களின் ஒரு குழுவும் பஸ்தர் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளது. சரணடைந்த 700-க்கும் மேற்பட்ட நக்ஸல்களின் குழந்தைகள், சகோதர சகோதரிகள் இந்த விளையாட்டுக்களில் பங்கேற்றதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மார்ச் 31, 2026-ல் நமது நாடு நக்ஸலிசத்தில் இருந்து விடுபடும்.

இன்னமும் தவறாக வழிநடத்தப்பட்டு ஆயுதங்ளை கைகளில் வைத்திருக்கும் நக்ஸல்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களின் நலனுக்காகவும், உங்களின் குடும்பத்தினரின் நலனுக்காகவும், சத்தீஸ்கரின் நலனுக்காகவும் ஆயுதங்களை கீழே போட வேண்டும். வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கரை உருவாக்குவதற்கான பயணத்தில் நீங்கள் இணைய வேண்டும்.

7 மாவட்டங்கள் அடங்கிய பஸ்தர் பகுதியில் பால் கூட்டுறவு நிறுவனங்கள் அமைக்கப்படும். இந்த மாவட்டங்கள் அதிக பால் உற்பத்தி செய்யும் மாவட்டங்களாக மாறும். பால் பண்ணை மூலம் அவர்களின் வருவாய் அதிகரிக்கும்.

பஸ்தரின் கலாச்சாரம் உலகின் உயர்ந்த கலாச்சாரங்களில் ஒன்று. இங்குள்ள அனைத்து பழங்குடியினரின் பாரம்பரிய உணவு, உடை, கலை, இசைக்கருவிகள், விளையாட்டு ஆகியவை நமது ஒட்டுமொத்த நாட்டுக்கும் வளத்தைச் சேர்க்கும் பாரம்பரியமாகும்.

பஸ்தர் ஒலிம்பிக்-2025ன் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண இந்திய விளையாட்டு ஆணையத்தின் குழு வந்துள்ளது. அவர்கள், திறமையாளர்களை அடையாளம் கண்டு வரவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் 2036ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பஸ்தர் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு லட்சத்து 50,000 வீரர்கள் பங்கேற்றார்கள். இந்த ஆண்டு 3.91 லட்சம் வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். இது இரண்டரை மடங்கு அதிகரிப்பு. இதில், பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆண்களைவிட பெண்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT