சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதி யாசிர்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பிர் பஞ்சால் மலைத் தொடரை கடந்து தீவிரவாதிகள் குழு ஒன்று செல்வதாக, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் ஆஷ்தர்’ தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி யாசிர் கொல்லப்பட்டார். மற்றொரு லஷ்கர் தீவிரவாதியான மூசாவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொல்லப்பட்ட யாசிர் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர். கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற 3 முக்கிய தீவிரவாதத் தாக்குதல்களில் அவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024 மே 4-ம் தேதி பூஞ்ச் பகுதியில் உள்ள ஷாஹ்சிதார் அருகே, சனாய் டாப் பகுதியில் உள்ள தளத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த விமானப்படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.