இந்தியா

“மோடிக்கு எதிரான கார்கே கருத்து தனிப்பட்ட தாக்குதல் அல்ல” - கே.சி.வேணுகோபால்

மோகன் கணபதி

சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து சித்தாந்த ரீதியிலான தாக்குதலே தவிர, தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆலோசனைக் கூட்டங்களை கே.சி.வேணுகோபால் மேற்கொண்டு வருகிறார்.

சண்டிகரில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர், சட்டமன்றக் கட்சித் தலைவர், முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், செயல் தலைவர்கள் உள்ளிட்டோருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கே.சி. வேணுகோபால், “இதை ஒரு சித்தாந்த ரீதியிலேயே மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். நான் அப்படித்தான் புரிந்துகொண்டேன். பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது. கார்கே அதைத்தான் குறிப்பிட்டார்.

கார்கேவுக்கு எதிராக அவர்கள் ஒரு சுத்திகரிப்பு சடங்கை செய்தார்கள். ஏனெனில், கார்கே ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர்கள் அந்த இடத்தில் சுத்திகரிப்பு செய்தனர். இதன் பொருள் என்ன?

இது கார்கேவின் சித்தாந்த ரீதியிலான தாக்குதலே தவிர, தனிப்பட்ட தாக்குதல் அல்ல. அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பையே குறிப்பிட்டார். அவ்வளவுதான்” என தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வேணுகோபால், “நாங்கள் நவ.4-ம் தேதி எங்கள் பிரச்சாரத்தை தொடங்குகிறோம். அப்போது எங்கள் தலைவர் ராகுல் காந்தி வருகை தர உள்ளார். அப்போது பிரம்மாண்டமான ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும்.

பஞ்சாப் மக்களுடன் ராகுல் காந்திக்கு ஒரு வலுவான பிணைப்பு உள்ளது. இன்று நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், ஜென்ஸீ தலைமுறையினர், ராகுல் காந்தியின் தொலைநோக்குப் பார்வையையும் கருத்துகளையும் முழுமையாக ஆதரிக்கின்றனர்.

பஞ்சாபில் நாளுக்கு நாள் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமடைந்து வருகிறது. சட்டம் - ஒழுங்கின் மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காவல் துறை சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவில்லை. மாறாக, பிரச்சினைகளை உருவாக்கும் கருவியாக அது செயல்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியின்போது நிலவிய அமைதியான சூழலைத்தான் பஞ்சாப் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அந்த பழைய காலத்தை நினைத்துப் பார்க்கிறார்கள். அந்தச் சூழலை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT