திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயிலும் தெலங்கானா மாநிலம் ஜெக்டியால் மாவட்டம் தர்மபுரியைச் சேர்ந்த லச்சன்னாவும் 1991-ல் சவூதி அரேபியாவில் வேலை செய்யும்போது நண்பர்களாகி உள்ளனர்.
அந்தக் காலகட்டத்தில், லச்சன்னாவிடமிருந்து இஸ்மாயில் 120 சவூதி ரியால்களைக் (ரூ.1,000) கடனாகப் பெற்றிருந்தார். அதன்பின் சில நாட்களிலேயே லச்சன்னா இந்தியா திரும்பினார். அக்காலத்தில் செல்போன்களோ அல்லது சமூக ஊடகங்களோ இல்லாததால், நாளடைவில் இருவருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது. தொகை சிறியதாக இருந்தாலும், இஸ்மாயில் அதை மறக்கவில்லை.
சமீபத்தில், அவர் தனது பழைய நண்பரைக் கண்டுபிடித்து பணத்தைத் திருப்பித்தர முடிவு செய்தார். ஆனால், அவரிடம் லச்சன்னாவின் தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை.
நண்பரின் ஊர் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு, இஸ்மாயில் அந்த நகரத்தைக் கண்டறிந்து அங்கு பயணம் செய்தார். உள்ளூர் மக்களின் உதவியைக் கேட்டு, ஒருவழியாகத் தனது நண்பரின் குடும்பத்தாரை சந்தித்த இஸ்மாயில், அவர்களிடம் ரூ.25,000 பணத்தை ஒப்படைத்தார்.
அந்த சமயத்தில் லச்சன்னா வளைகுடா நாட்டில் வேலை செய்து கொண்டிருந்ததால், இருவரும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டனர். 35 ஆண்டுக்கு பின் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடுத்த வெறும் ரூ.1,000 கடனுக்காக, இஸ்மாயில் ரூ.25,000 பணத்தைத் திருப்பிக் கொடுத்தது தனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக லச்சன்னா கூறினார்.
இஸ்மாயிலை ஒரு நேர்மையான, நல்ல உள்ளம் படைத்த மனிதர் என்று பாராட்டிய அவர், இந்தச் செயல் அவர்களின் நட்பின் வலிமையைப் பிரதிபலிக்கிறது என்றும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தனது வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.