கேரளா உயர் நீதிமன்றம்
கொச்சி: கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட வழக்கில், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இரு குற்றவாளிகளின் 20 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பில் எந்தவொரு சட்டமீறலும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்ற பிரபல நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மற்றும் 6-வது குற்றவாளிகளான சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் தங்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் வரை தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயகுமார் அடங்கிய அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பொது நலன், சமூகத்தில் இதன் தாக்கம் மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி அதைத் துல்லியமாகச் செயல்படுத்தியதற்கும், அதில் சலீமும், பிரதீப்பும் ஒரே எண்ணத்தோடு உதவியதற்கும் போதுமான ஆதாரங்கள் முதற்கட்டமாக உள்ளன.
மேலும், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தவொரு தெளிவான தவறோ அல்லது சட்டமீறலோ இருப்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டத் தவறிவிட்டதால் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
4 பேர் விடுதலை: முன்னதாக கடந்த ஜூலை 9 அன்று முதன்மை குற்றவாளியான ‘பல்சர் சுனி'யின் தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப் உட்பட 4 பேரை செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே விடுதலை செய்துவிட்டது.