இந்தியா

“வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதில் கேரள அரசின் பங்கு ஏதுமில்லை” - முதல்வர் வி.டி.சதீசன்

மோகன் கணபதி

திருவனந்தபுரம்: பினராயி விஜயன் மகள் வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதில் மாநில அரசின் பங்கு ஏதுமில்லை என்றும், இதற்கு உயர் நீதிமன்றமே வழிவகுத்தது என்றும் கேரள முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் (சிபிஎம்) மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின், செயல்பாட்டில் இல்லாத ஐடி நிறுவனமான ‘எக்ஸாலாஜிக்' மற்றும் சுரங்க நிறுவனமான சிஎம்ஆர்எல் ஆகியவற்றுக்கு இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை கொச்சி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வீணாவுக்கு அமலாக்கத்துறை முதன்முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இவருடன் சேர்த்து சிஎம்ஆர்எல் நிறுவனத் தலைவர் சசிதரன் கர்த்தா உட்பட 8 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.டி.சதீசன், “சுரங்க நிறுவனமான சிஎம்ஆர்எல் விசாரணையை நிறுத்தக் கோரி நீதிமன்றங்களை அணுகிய பின்னரே சட்ட நடைமுறைகள் தொடங்கின. அந்த மனுவும், அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டதால் அமலாக்கத் துறை விசாரணை தொடர வழி ஏற்பட்டது. அந்த வகையில், உயர் நீதிமன்றமே இந்த விவசாரணைக்கு வழி வகுத்தது.

அமலாக்கத் துறை விசாரணை தொடர்பாக மாநில அரசு எதையும் தீர்மானிக்க முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

தொழிலதிபர் கவுதம் அதானியுடன் உள்ள தொடர்பு குறித்த மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சதீசன், “எனக்கும் கவுதம் அதானிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது வணிக குழுமத்துடனும்கூட எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT