திருவனந்தபுரம்: கேரளத்தில் தனியார் கருத்தரிப்பு மைய உரிமையாளரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி சுஹைல் ஷாஜஹான், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரஸ் குழு உறுப்பினரான சுஹைல், கண்ணூர் எம்.பி. கே.சுதாகரனின் நெருங்கிய ஆதரவாளர். அவர் தனியார் மருத்துவமனையின் கருத்தரிப்பு மைய உரிமையாளரிடம் பணம் வாங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பேட்டை போலீஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இது மாநில காங்கிரஸ் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மருத்துவமனைக்கு எதிராக சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், அதை நீக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையெனில் மேலும் செய்திகளை வெளியிடுவேன் என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அமைத்த வலையில், பணம் வாங்க வந்த சுஹைல் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
சுஹைலின் சந்தேகத்துக்குரிய தொடர்புகள், அரசியல் பலத்தைத் துஷ்பிரயோகம் செய்தது குறித்து சிறப்புப் பிரிவு உளவுத்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது. எம்.பி. இல்லாதபோதும் எம்.பி. பலகை பொருத்திய வாகனத்தில் அவர் பயணித்ததும், செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் மூலம் ஒப்பந்தங்களைப் பெற முயன்றதாக சந்தேகிக்கப்படுவதும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மாநில காவல் துறையின் ‘ஆபரேஷன் தூஃபான்’ குற்ற ஒழிப்பு நடவடிக்கையின்போது, கொச்சியில் ரவுடிகளுடன் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் சுஹைல் பங்கேற்றது தெரியவந்ததையடுத்து, அவர் காவல் துறையின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.
ஏகேஜி மையத் தாக்குதல் வழக்குடன் தனக்குள்ள தொடர்பை, செல்வாக்கின் அடையாளமாக அவர் காட்டிக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. செந்தி அனில், முன்னாள் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் தொடர்பான விவகாரங்களில் அவர் தலையிட்டது, காங்கிரஸுக்குள் ஏற்கெனவே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. சுஹைலின் நிதி ஆதாரங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைமை அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.