இந்தியா

மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

பாரதி ஆனந்த்

அண்டை மாநிலமான கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நேற்றுடன் (மார்ச் 23) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கேரளாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சுதீசன் கடைசி நாளான நேற்றுதான் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (மார்ச் 24) முடிந்த நிலையில் மார்ச் 26 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

பெறப்பட்ட வேட்புமனுக்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 1,252 வேட்பாளர்கள் மொத்தமாக 2,117 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டதைவிட அதிகமான மனுக்கள் என்பது சுவாரஸ்யத் தகவல். ஒரு சிலர் 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்வதால் வேட்புமனுக்கள் எண்ணிக்கை உயரும்.

ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 33(7)(ஏ)-ன்படி ஒருவர், நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் முடியும், 33(7)(பி)-ன் படி அதிகபட்சமாக 2 தொகுதிகளில் போட்டியிடலாம். ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

          

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் புள்ளி விவரங்களின்படி, இம்முறை கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 141 வேட்பு மனுக்களும், வயநாட்டில் போட்டியிட மிகக் குறைந்தளவிலான வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.

140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் களத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF), பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த மும்முனைப் போட்டி குறித்த கள நிலவரத்தைப் பார்ப்போம்.

முதலாவதாக ஆளும் இடது ஜனநாயக முன்னணியை (எல்டிஎஃப்) எடுத்துக் கொள்வோம். ஹாட்ரிக் வெற்றியுடன் 3-வது முறையாக கேரள சட்டப்பேரவையைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் (S), தேசிய மதச்சாரபற்ற கூட்டணி, இந்திய சோஷலிஸ்ட் ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு), கேரள காங்கிரஸ் (B) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தக் கூட்டணி.

அதன்நிமித்தமாக, ஆளும் எல்டிஎஃப் கூட்டணி கடந்த 10 ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக செய்தவற்றை பட்டியிலிட்டு கூடவே, “எல்டிஎஃப் இல்லாவிட்டால் வேறு யார்?” “mattarund LDF allathe” (Who else but the LDF?) என்ற தலைப்பில் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது.

இதில் பிரதானமாக எல்டிஎஃப் முன்வைப்பது மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி. கேஐஐஎஃப்பி (Kerala Infrastructure Investment Fund Board) மூலம் கட்டபட்டுள்ள மேம்பாலங்கள், லைஃப் மிஷன் திட்டம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஆகியனவற்றை சுட்டிக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது மாநிலத்தில் அண்மையில் அமலுக்கு வந்த வேலையில்லா மகளிர், திருநங்கைகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ஸ்ரீ சுரக்‌ஷா (Sthree Suraksha) திட்டத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்கிறது. தங்கள் கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஒரு உந்துவிசையாக அமையும் என்று அது கணிக்கிறது.

இத்துடன் மாநிலத்தில் கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாடு ஆகியனவற்றையும் பிரச்சார ஆயுதமாக கையிலெடுத்துள்ளது. கூடவே ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதில் மாநில அரசின் பங்களிப்பையும் அக்கட்சி முன்னிலைப்படுத்துகிறது. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முகமாக பினராயி விஜயன் இருக்கிறார்.

இப்படியான சூழலில், தற்போது ஆளும் கட்சிக்கு எதிரான அலை இருப்பதாக அம்மாநில மூத்த அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஆன்ட்டி இன்கம்பன்சி அலையால் வாக்குகள் பிரியும் என்றும் அதை அறுவடை செய்யப் போவது யார் என்பது தேர்தல் முடிவில் தெரியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு மூத்த அரசியல் நோக்கரோ, சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம், மாநிலத்தின் பணவீக்கப் பிரச்சினை, கிறிஸ்தவர்கள் மற்றும் சாதிவாரியான அதிருப்திகள் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கணிக்கிறார்.

கள நிலவரம் இப்படியிருக்க, இந்தியாவில் பல மாநிலங்களிலும் தனது பிடியை இழந்துள்ள இடதுசாரிகளுக்கு கேரளாவை தக்கவைத்துக் கொள்வது மாநிலத்தை தாண்டி தேசிய அளவிலான அரசியலிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, இந்தத் தேர்தலில் எல்டிஎஃப் அதிருப்தியாளர்களான சிபிஎம் மூத்த தலைவர் ஜி.சுதாகரன் சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, எல்டிஎஃப் ஆதரவாளரான நீலாம்பூர் எம்எல்ஏ எம்வி அன்வர், யுடிஎஃப்-உடன் கைகோர்த்துள்ளது ஆகியன பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கள நிலவரத்தை அலசுவோம். “கேரளா வெல்லும், யுடிஎஃப் வழிநடத்தும்” (Kerala will win, UDF will lead) இதுதான் அந்தக் கூட்டணி முன்னெடுத்துள்ள பிரச்சாரம்.

கேரளாவில் வலுவான ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை இருப்பதாக நம்பும் இந்தக் கூட்டணி, அதை அறுவடை செய்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சட்டப்பேரவை பிரவேசம் செய்யும் முனைப்பில் உள்ளது.

அதனால், ஆளுங்கட்சியின் குறைகளாக மக்கள் கருதுபவற்றை தொகுத்து அவற்றை மக்கள் முன்னால் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அதில் மிக முக்கியமானவையாக சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம், மாநிலத்திலிருந்து படித்த மாணவர்கள் வேலை நிமித்தமாக அதிகப்படியாக வெளியேறுவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மாநில அரசு கடைப்பிடிக்கும் ஆளுநருடனான மோதல் விவகாரமும் யுடிஎஃப்-ஆல் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே காங்கிரஸ் விமர்சனம் செய்ய பல்வேறு பிரச்சினைகளும் இருக்க, அண்மையில் முதல்வர் பினராயின் விஜயன் - நடிகர் மோகன் லால் இணைந்து உருவாக்கிய கண்டும் மிண்டியும் இருவர் ‘Kandum Mindiyum Iruvar’ என்ற எல்டிஎஃப் பிரச்சாரப் படம் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. மக்கள் வரிப் பணத்தில் எதற்கு இந்த ‘PR ஸ்டண்ட்’ என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிராகக் கோஷமிடத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சுதீசன், “அண்மையில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் பெற்ற வெற்றி வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதேபோல், 2025 உள்ளாட்சி தேர்தலில் 6 மாநகராட்சிகளில் 3-ஐ யுடிஎஃப் கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக 1,200 உள்ளாட்சி அமைப்புகளில் 648-ஐ காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் வென்றது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளா வெல்லும், யுடிஎஃப் வழிநடத்தும்’ என்பதை நாங்கள் இந்த வெற்றிப் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே தீர்மானித்து சொல்கிறோம்.” என்றார்.

வேட்பு மனு தாக்கல் நிறைவானதற்கும் தேர்தல் நடைபெறுவதற்கும் இடையே வெறும் 10 நாட்களே இருப்பது யுடிஎஃப் கூட்டணியின் மிகப் பெரிய விமர்சனமாக உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாலேயே மத்தியில் ஆளும் பாஜக கையில் உள்ள தேர்தல் ஆணையம் மூலம் இவ்வாறான நெருக்கடியான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கண்டனம் தெரிவித்ததும் இங்கே சுட்டிக்காட்டித்தக்கது.

கேரள தேர்தலின் மும்முனைப் போட்டியில் மூன்றாவதாக இருப்பது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தக் கூட்டணி ‘வளர்ந்த கேரளம்’ (Viksit Keralam) என்பதை தனது பிரச்சாரத் தலைப்பாக எடுத்துக் கொண்டுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியதையும் அது தனது சட்டப்பேரவைத் தேர்தலில் பெருமித அடையாளமாக உச்சரிக்கத் தொடங்கியுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. காசர்கோடு மாவட்டத்தின் மஞ்சேஸ்வரம் தொகுதி அதில் முக்கியமானது. இங்குதான் 2016 சட்டபேரவைத் தேர்தலில் பாஜக வெறும் 89 வாக்குகளில் தோல்வியைத் தழுவியது. அதேபோல் தனக்கான ஆதரவு உள்ள பாலக்காடு, திருவனந்தபுரத்தின் நேமம் தொகுதிகளை பாஜக குறிவைப்பதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதிகளில் பாஜகவில் செல்வாக்குமிக்க கே.சுரேந்திரன், சோபா சுரேந்திரன், வி.முரளீதரன், ராஜீவ் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாங்கள்தான் அந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் என்று முறைப்படி அறிவிப்பதற்கு முன்னதாகவே அங்கு பிரச்சாரத்தை தொடங்கியிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

கேரளாவில் ஆளும் எல்டிஎஃப், பிரதான எதிர்க்கட்சி யுடிஎஃப் என இரண்டு கூட்டணிகள் மீதும் பாஜக முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு இரண்டுமே மதவாதத்தை ஊக்குவிக்கின்றன என்பதே. இது சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதுஒருபுறம் இருக்க, யுடிஎஃப் போல பாஜகவும் ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு அலையை அறுவடை செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கும் சூழலில், கேரளாவைப் பொறுத்தவரை பாஜகவின் வாய்ப்பு இப்போதும்கூட சொற்பமே என்று அம்மாநில மூத்த அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இப்போதைய சூழலில் பாஜகவுக்கு 0 முதல் 4 என்றளவிலேயே வாய்ப்புள்ளது என்றும், பாஜக ஸ்ட்ராங்ஹோல்ட் என்று கருதும் 4 தொகுதிகளில் கூட எதிர்க்கட்சி களமிறக்கும் வேட்பாளர்களைப் பொருத்து முடிவு மாறலாம் என்கின்றனர். அந்த வகையில் கேரள சட்டப்பேரவை களத்தில் 140 தொகுதிகளில் 15 தொகுதிகளில் தான் மும்முனைப் போட்டி எனக் கூறலாம் என்று அவர்கள் கணிக்கின்றனர்.

கள நிலவரம் இவ்வாறாக இருக்க, கேரளாவில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணி ஹாட்ரிக் அடிக்கப் போகிறதா?, யுடிஎஃப் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் ரீ என்ட்ரி தரப்போகிறதா?, பாஜக கணிசமான எம்எல்ஏ.க்களை அனுப்பப் போகிறதா என்பது மே 4 வாக்கு எண்ணிக்கை நாளில் மக்கள் தீர்ப்பாக நமக்குத் தெரியவரும்.

2021 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 140 தொகுதிகளில் சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் 99 இடங்களைக் கைப்பற்றியது, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் 41 தொகுதிகளையும், பாஜக தலைமையிலான என்டிஏ வெற்றி என்று ஏதும் இல்லாவிட்டாலும் 12.41% வாக்குகள் பெற்றது என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT