குவாஹாட்டி: அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்திலுள்ள காஸிரங்கா தேசியப் பூங்கா அருகே நேற்று முன்தினம் மினி பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விபத்து நடந்த சாலை மிகவும் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மோசான சாலை விபத்து என்று யாரும் கூறிவிட முடியாது.
விபத்தை ஏற்படுத்திய மினி பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ.9 லட்சம் இழப்பீடு
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.9 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.7 லட்சத்தை அசாம் அரசும், ரூ.2 லட்சத்தை மத்திய அரசும் வழங்கும்.