இந்தியா

‘தெலங்கானா ராஷ்ட்ரிய சேனா’ கட்சியை தொடங்கியது ஏன்? - கவிதா விவரிப்பு

மோகன் கணபதி

ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முன்னாள் தலைவரான கவிதா, தெலங்கானா ராஷ்ட்ரிய சேனா என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர்களான டி. ஹரிஷ் ராவ் மற்றும் ஜே. சந்தோஷ் ராவ் ஆகியோருக்கு எதிராக கருத்து தெரிவித்ததை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் கவிதா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, தெலங்கானா ஜாக்ருதி எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கிய கவிதா, தற்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சேனா என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இதற்கான தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. தனது கட்சியின் பெயரை சுருக்கமாக டிஆர்எஸ் என அவர் அறிவித்தார். பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற பெயரில் இருந்தது. அப்போது அக்கட்சி டிஆர்எஸ் என அழைக்கப்பட்டது. தற்போது அதேபோல், டிஆர்எஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டதை அடுத்து பேசிய கவிதா, “தெலங்கானா மாநில விருப்பங்களை நிறைவேற்றவே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் கட்சியின் பெயர், செயல்பாடுகள் உள்பட கட்சியின் ஆன்மாவையே அவர்கள் மாற்றிவிட்டனர். இதன் காரணமாகவே, மக்களுடனான கட்சியின் பிணைப்பு அறுந்துபோனது.

ஓர் அரசியல் கட்சி தனது அடிப்படை நோக்கத்தில் இருந்து திசை திருப்பப்படும்போது அதனால் நிலைத்து நிற்க முடியாது. தெலங்கானாவின் நிறைவேறாத செயல்திட்டங்கள், விருப்பங்களை முன்னெடுத்துச் செல்ல ஒரு மாநில கட்சி தேவைப்படுகிறது. அத்தகைய பிராந்திய கட்சியாகவே எங்கள் கட்சி விளங்கும்.

என் தந்தை தலைவராக இருக்கும் பிஆர்எஸ் கட்சி, எங்களை வெளியேற்றிவிட்டது. நாங்களாக வெளியேறவில்லை. நாங்கள் அவர்களை விட்டு விலகவில்லை. ஆனால், அவர்கள் எங்களை வெளியேற்றிவிட்டார்கள்.

நான் தெலங்கானாவின் மகள். என் ரத்தத்தில் தெலங்கானாவே ஓடுகிறது. தெலங்கானாாவின் உறுதி என்னுள் நிறைந்துள்ளது. நாங்கள் மிகவும் பிடிவாதம் நிறைந்தவர்கள். எங்கள் லட்சியத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு கொண்டவர்கள். எங்கள் வாழ்வின் 20 ஆண்டுகளை தெலங்கானா போராட்டத்துக்காகவே செலவிட்டோம். தெலங்கானாவை மேம்படுத்தவும், அதன் விருப்பங்களை நிறைவேற்றவும் நாங்கள் பாடுபடுவோம்.

எங்கள் பழைய கட்சி எங்களுடன் இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி, எங்கள் குடும்பம் எங்களுடன் துணை நின்றாலும் சரி; துணை நிற்காவிட்டாலும் சரி தெலங்கானா மக்களே எனது குடும்பம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தெலங்கானா மண்ணின் வாசம் எங்களை வழிநடத்திச் செல்லும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT