இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மறுகுடியமர்த்த கோரி பண்டிட்டுகள் போராட்டம்

மோகன் கணபதி

ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஷ்மீரி பண்டிட்டுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்துக்களான காஷ்மீர் பண்டிட்டுகள், கடந்த 1990-ம் ஆண்டு ஜன.19-ம் தேதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். முஸ்லிமாக மதம் மாறுங்கள் அல்லது வெளியேறுங்கள் இல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் கொலைகள் காரணமாக ஆயிரக்கணக்கான பண்டிட்டுக்கள் தங்கள் பூர்விகத்தைவிட்டு வெளியேறினர். அவர்கள், டெல்லியிலும், ஜம்முவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் வசிப்பிடம் இன்றி தவித்து வந்தனர். காலப்போக்கில், அவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

எனினும், தாங்கள் வசித்து வந்த, தங்கள் முன்னோர்கள் வசித்து வந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து விரட்டப்பட்ட தினத்தை பேரழிவு தினமாக அவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன், 36-வது ஆண்டை முன்னிட்டு, ஜம்மு நகரில் நடைபெற்ற போராட்டத்தில், நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தாங்கள் வசிப்பதற்கு தனி பகுதியை அமைத்துத் தர வேண்டும் என்றும், தாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காஷ்மீர் பண்டிட்டுகளின் கோரிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, ‘‘காஷ்மீர் பண்டிட்டுகளை யார் தடுக்கிறார்கள்? அவர்களை யாரும் தடுக்கவில்லை. அது அவர்களின் வீடு. அவர்கள் திரும்பி வர வேண்டும். பல காஷ்மீரி பண்டிட்டுகள் இன்னமும் பள்ளத்தாக்கில் வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறவில்லை.

வெளியேறிய பண்டிடுகளுக்கு தற்போது வயதாகிவிட்டது. பலர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். அவர்கள் வேண்டுமானால் காஷ்மீருக்கு வந்து செல்லக்கூடும். ஆனால், அவர்கள் நிரந்தரமாக அங்கே திரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டபோது மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் பரூக் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT