புதுடெல்லி: 35 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீர் விடுதலை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மாநாட்டில் அவர் பேசியதாவது: தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 35 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தீவிரவாதிகளிடமிருந்து விடுபட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி லத்தீப் பட், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம், இது சாத்தியமானது. தீவிரவாதத்துக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் சகிப்பின்மைக் கொள்கையே களத்தில் தீர்க்கமான முடிவுகளைத் தந்துள்ளது.
அதே வேளையில் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் முழு தீவிரவாத அமைப்பையும் தகர்க்காவிட்டால், நாம் முழுமையான வெற்றியை அடைய முடியாது. தீவிரவாதிகள் ஒரு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பே அவர்களைப் பிடித்துச் சிறையில் அடைப்பதே ஒரு வெற்றிகரமான அமைப்பின் அடையாளம்.
சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சகம், உளவுத்துறை அமைப்புகளின் முயற்சிகள் மூலம் 2019 முதல் 36 நாடுகளில் இருந்து தப்பியோடியவர்கள் 303 பேர் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அமித்ஷா பேசினார். சண்டிகரில் அமையவிருக்கும் என்ஐஏ அலுவலக வளாகத்துக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.