புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையால், உத்தர பிரதேசம் வாராணசியில் கடந்த 2022-ல் காசி தமிழ் சங்கமம் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
இதுவரை நான்கு சங்கமங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றின் மூலம், வாராணசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே அறிவு, மொழி, மரபுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த அர்த்தமுள்ள பரிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது நிகழ்வு (கேடிஒ-5.0) வரும் நவம்பர் 28-ல் தொடங்கி டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யூ), சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்(சிஐசிடி) ஆகியவை இணைந்து நடத்துகின்றன. மேலும் இவர்களுடன், உ.பி. அரசு மற்றும் மத்திய அரசின் கலாச்சாரம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களும் இணைந்து செயல்படுகின்றன.
நடப்பாண்டின் கேடிஓ-5.0 க்கான கருப்பொருளாக ‘திருக்குறள் பயில்வோம்’ என்பது தேர்வாகி உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான இணையதள முன்பதிவை மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்தார். இந்த இணயதளப் பதிவு நவம்பர் 13 அன்று முடிகிறது. ஆர்வமுள்ளவர்கள், சென்னை ஐஐடி நிர்வகிக்கும் https://kashitamil.iitm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து வருவோர் பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.