இந்தியா

காசி தமிழ் சங்கமம் 5.0: விழிப்புணர்வு ஏற்படுத்த வாராணசியில் பிஎச்யு சார்பில் ரங்கோலி, புகைப்பட போட்டி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாராணசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம் 5.0’ (கேடிஎஸ் 5.0) நவம்பர் 28-ல் தொடங்கி டிசம்பர் 12 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘திருக்குறள் பயில்வோம்’ என்பதாகும்.

இது தொடர்பாக பொது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவும், கலாச்சார ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யு) சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக வாராணசி கங்கை கரைகளில் முக்கியமான (அஸ்ஸி காட்) பகுதியில் ரங்கோலி போட்டி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில் பிஎச்யு, மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் மற்றும் நகரின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் இந்திய கலாச்சாரம், மரபுகள் மற்றும் சமூக விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு கருப்பொருள்களைக் கொண்டு வண்ணமயமான ரங்கோலி வரைந்தனர். இந்த கலைப்படைப்புகள் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன.

மேலும் நேற்று புகைப்படப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பிஎச்யு மாணவர்கள், கங்கைக் கரையின் ஹரிச்சந்திர காட் அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காமகோட்டீஸ்வரர் கோயிலைப் பார்வையிட்டனர். அங்குள்ள தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்களையும் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் அவர்கள் படம் பிடித்தனர்.

கேடிஎஸ் 5.0-க்கான இந்த விழிப்புணர்வு நிகழ்வில், மாணவர்களுக்கு காசியின் மரபுகள், கோயில் கட்டிடக்கலை மற்றும் ஆன்மிக பாரம்பரியம் குறித்து அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வாராணசி மண்டல ஆணையரான தமிழர் கே.விஜயேந்திர பாண்டியன், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறும்போது, “அதிகப்படியான மக்களை கேடிஎஸ் 5.0 வுடன் இணைப்பதுதான் இந்த நிகழ்வுகளின் நோக்கம். இதன்மூலம், காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமை குறித்த செய்தியும் நாடு முழுவதும் சென்றடையும். ரங்கோலி, புகைப்படப் போட்டி போன்ற நிகழ்வுகள் மூலம், கேடிஎஸ் 5.0 மீது பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், ஆர்வத்தை வளர்க்கவும் பிஎச்யு செய்யும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT