தமிழ் மிகப் பழமையான மொழியும் காசி மிகப் பழமையான நகரமும் ஆகும். இவற்றை இணைக்கும் விழாதான் காசி தமிழ்ச் சங்கமம். இது தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள பழைய பண்பாட்டு மற்றும் ஆன்மிக உறவைக் கொண்டாடுகிறது. தமிழர்கள் ராமேஸ்வரத்தில் நீராடி மணலை கங்கையில் விடுவதும், கங்கை நீரை ராமநாதசுவாமி கோயிலுக்கு கொண்டு வருவதும் இந்த உறவின் அடையாளம். அதேபோல காசி மக்களும் ராமேஸ்வரத்திற்கு யாத்திரை செல்கிறார்கள்.
தென்காசி, விருத்தாசலம் (விருத்த காசி), அவிநாசி ஆகிய ஊர்களின் பெயரிலேயே காசி இருக்கிறது. அவை காசியுடன் பழைய தொடர்பு உடையவை. “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்றார் பாரதியார். காசியின் நல்ல கருத்துகள் காஞ்சியிலும், காஞ்சியின் சிந்தனைகள் காசியிலும் கேட்க வேண்டும் என்பது அவர் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியாகவே இந்தச் சங்கமத்தை நான் பார்க்கிறேன்.
தமிழ் நமது நாட்டின் பெரிய செல்வம். அதில் சிறந்த இலக்கியம், ஆழமான சிந்தனை, நல்ல அறநெறி உள்ளது. எனவே தமிழை உலகம் முழுவதும் அறியச் செய்வது இந்தியாவுக்கும் பெருமை. காசி தமிழ் சங்கமம் 2022-ல் தொடங்கப்பட்டது. அதன் நோக்கம் தமிழகமும் காசியும் பல ஆண்டுகளாகப் பகிர்ந்த அறிவையும் பண்பாட்டையும் மீண்டும் நினைவுகூர்ந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதாகும். இது “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வின் வெளிப்பாடாகும்.
முதல் சங்கமம் இரு பகுதிகளின் வரலாற்றுத் தொடர்பை மக்களிடம் கொண்டு சென்றது. இரண்டாவது சங்கமம் கல்வி, இலக்கியம், கலை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பரிமாற்றத்தை விரிவுபடுத்தியது. 3-வது சங்கமம் அகத்திய முனிவரின் மரபையும் இந்தியாவின் பழைய அறிவையும் முன்னிறுத்தியது. நான்காவது சங்கமம் “தமிழ் கற்கலாம்” திட்டத்தின் மூலம் காசி மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழக மக்கள் காசி பண்பாட்டை நேரில் அறியவும் வாய்ப்பளித்தது.
இந்த ஆண்டின் நோக்கம் “திருக்குறள் பயில்வோம்”. திருக்குறளை இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லும் முயற்சி இது. ஏனெனில் அறம், பொருள், இன்பம் என்ற மனித வாழ்வின் அடிப்படை விழுமியங்களை இரண்டே வரிகளில் ஆழமாக விளக்கும் திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டும் உலகப் பொதுமறை. முதல் இரண்டு சங்கமங்களில் திருக்குறள் 13 மொழிகளிலும் பின் 16 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த முறை 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. அதில் 10 வெளிநாட்டு மொழிகள் அடங்கும். முதல் சங்கமத்தில் தமிழகத்திலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வந்து இரு பகுதிகளின் பண்பாடு, கலை, இலக்கியம், ஆன்மிகம், அறிவுப் பாரம்பரியங்களை பரிமாறிக்கொண்டனர். தமிழகத்தி லிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், ஆன்மிகப் பெரியவர்கள் என பல்வேறு துறையினர் சுமார் 1,400 பேர் இந்த சங்கமத்தில் பங்கேற்பது இது மக்களின் சங்கமம் என்பதை உணர்த்துகிறது.
இது ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் மக்களிடையே நீடித்த பண்பாட்டுத் தொடர்புகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது. பழைய பாரம்பரியத்தைக் காப்பதும் புதிய வளர்ச்சியை அடைவதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. ஒவ்வொரு மொழியும் பண்பாடும் இந்தியாவின் அடையாளத்தை வளப்படுத்துகிறது. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நமது பொறுப்பு. இன்றைய உலகம் பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவின் பழைய நாகரிக அறிவும் வாழ்வியல் தத்துவங்களும் உலகிற்கு வழிகாட்டும் ஆற்றல் கொண்டவை.
திருக்குறளின் அறநெறியும் காசியின் ஆன்மிக மரபும் கருணை, நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, சுயநலமில்லாத பொது வாழ்வு, அனைவரின் நலன் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. கங்கை வட இந்தியாவின் வாழ்வாதாரமும் காவிரி தமிழகத்தின் உயிர்நாடியும் ஆகும். இரண்டும் வெவ்வேறு இடங்களில் ஓடினாலும் நமது ஒரே நாகரிகத்தை காட்டுகின்றன.
இந்தியாவின் ஒற்றுமை நிலத்தால் மட்டும் அல்ல, பகிர்ந்த வரலாறு, ஆன்மிகம், பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றாலும் உரு வாகிறது. காசி–தமிழக உறவை இன்றைய தலைமுறையிடம் விதைத்து நாளைய தலைமுறையிடம் வலுப்படுத்த வேண்டும். இந்தச் சங்கமம் தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள பழைய உறவை புதுப்பிக்கிறது. இந்தியாவின் பல மொழிகளும் பண்பாடுகளும் ஒன்றையொன்று புரிந்துகொண்டு ஒன்றையொன்று வளர்க்கும் இடமாக இது இருக்க வேண்டும். “ஒன்றுபட்ட பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வு எங்கும் வளரட்டும்.
- குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்