பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக நிர்வாகி கேசவ் பிரசாத் கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதாவது, 2023-ஆம் ஆண்டு கடந்த மே 5-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய வேளையில், காங்கிரஸ் சார்பில் அப்போதைய பாஜக அரசை விமர்சித்து, '40 சதவீத ஊழல் சர்க்கார்' என்றும், '2019-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு வரையில் பாஜக ரூ.1,50,000 கோடி கொள்ளையடித்துள்ளது' என்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, பாஜகவை விமர்சித்திருந்தார்.
இந்த அடிப்படை ஆதாரமற்ற விளம்பரத்தால் பாஜக ஆட்சிக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டது. பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்பிய ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இவ்வழக்கில் ராகுல் காந்தி, “எனது விமர்சனம் அப்போதைய பாஜக ஆட்சிக்கு எதிரானது. எந்த தனிநபருக்கும் எதிரானது அல்ல. ஆட்சி நிர்வாகத்தை விமர்சிப்பது அவதூறு வரம்புக்குள் கொண்டுவர முடியாது” என பதிலளித்தார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் தத் நேற்று தீர்ப்பை அறிவித்தார்.
அதில், ‘இந்திய தண்டனைச் சட்டத்தின் 499-ஆம் பிரிவின்படி தனியார் அமைப்பான பாஜக ஆட்சியாளர்கள், பொது ஊழியர்கள் சார்பாக அவதூறு வழக்கைத் தொடர முடியாது. ஏனெனில் அவதூறு வழக்கு தொடர்வதற்கு அந்த அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
தனி நபரோ, தனியார் அமைப்போ அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்ள முடியாது. எனவே ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸார் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.