பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்டவரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த திட்டவரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. இதற்காக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை ஏற்கெனவே அமைத்துள்ளது.
இந்நிலையில் மேகேதாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த 30 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், “காவிரி நீர்ப்பாசன கழக இயக்குநரின் கீழ் இந்த நிபுணர் குழு செயல்படும். இதன் அலுவலகம் பெங்களூரு தெற்கு மாவட்டம், ராமநகராவில் செயல்படும். அங்கு பிரத்யேகமாக மேகேதாட்டு திட்ட அலுவலகம் நிறுவப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.