கோப்புப் படம்

 
இந்தியா

கர்நாடக முதல்வராகிறாரா டி.கே. சிவக்குமார்? - டெல்லியில் முக்கிய ஆலோசனை

சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடக முதல்வரை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக டி.கே. சித்தராமையா பதவி வகித்து வருகிறார். இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி வகிக்க கட்சித் தலைமை ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுகால பதவிக்குப் பின் டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவியேற்பார் என அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகும் சித்தராமையாவே முதல்வராக தொடர்ந்து வருகிறார். இதனால், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக விவகாரம் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவகுமார், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “கட்சி மேலிடம் அழைத்ததன் பேரில் டெல்லி வந்துள்ளேன். கே.சி. வேணுகோபால் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தின் நோக்கம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என தெரிவித்தார்.

டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க நான் இந்திரா பவன் செல்கிறேன். செய்தியாளர்களை பிறகு சந்திக்கிறேன்” என தெரிவித்தார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக நீங்கள் தேர்வாக இருக்கிறீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு புன்னகைத்தவாறு சென்றார்.

கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்ன காரணம் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தல் பற்றியதாகவோ, எம்எல்சி தேர்தல் தொடர்பாகவோ, அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவோ இருக்கலாம். ராகுல் காந்தி மட்டுமே இதுபற்றி அறிவார். முதல்வரும், துணை முதல்வரும் அவரை சந்திக்கும்போது உங்களுக்கு தகவல் தெரியும்” எனக் கூறினார்.

எனினும், கர்நாடக முதல்வரை மாற்றுவது தொடர்பாகவே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT