பிரதமர் மோடி
புது டெல்லி: ‘கார்கில் போர் வெற்றி தினமான இன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் நமது ராணுவ வீரர்கள் காட்டிய அசாத்திய துணிச்சல், தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக நமது தேசம் நன்றி தெரிவிக்கிறது. இந்திய வீரர்களின் துணிச்சல் என்றென்றும் தேசத்தின் பெருமையாக திகழும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர்மலையை ஆக்கிரமித்தது. இதையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போரிட்டது. மே மாதம் தொடங்கிய போர் ஜுலை வரை நடைபெற்றது. இப்போரில், இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. ஜூலை 26-ம் தேதி கார்கில் பகுதியில் இந்தியக் கொடியை நமது ராணுவம் நிலைநாட்டியது.
இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கார்கில் போர் வெற்றி தினமான இன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் நமது ராணுவ வீரர்கள் காட்டிய அசாத்திய துணிச்சல் மற்றும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக நமது தேசம் நன்றி தெரிவிக்கிறது.
மிகக் கடினமான சூழலிலும் நமது ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய வீரமும் துணிச்சலும் என்றென்றும் தேசத்தின் பெருமைக்குரிய ஆதாரமாகத் திகழும். ராணுவ வீரர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும், கடமை உணர்வும் வருங்காலத் தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கிலில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர், “கார்கில் போர் வெற்றி தினம் என்பது நமக்கு ஒரு சாதாரண நாள் அல்ல. ஒவ்வொரு இளைஞருக்கும் இது ஒரு உத்வேகம் அளிக்கும் நாளாகும். தியாகம் மற்றும் சேவை ஆகிய உணர்வுகளே எந்தவொரு தேசத்தின் முதுகெலும்பாகவும் அமைகின்றன என்பதை இந்நாள் நமக்குக் கற்பிக்கிறது.
நமது வீரர்கள் எப்போதும் தங்கள் வீரத்தை நிரூபித்து வந்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் ஓராண்டு நிறைவை சமீபத்தில்தான் கொண்டாடினோம். அந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கும் நமது ஆயுதப் படைகள் அளித்த தக்க பதிலடி, அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
இனி பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஒருவேளை பேச்சுவார்த்தை என்று ஒன்று இருந்தால், அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும்.
பாகிஸ்தான் இப்போது பயங்கரவாதத்தைத் தனது அரசு கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. அந்நாட்டில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிட்டது. அங்குள்ள ராணுவம் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் கைகோத்துச் செயல்படுகிறது. எனவே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதே, பயங்கரவாதிகளையும் அவர்களை வளர்க்கும் அரசுகளையும் இனி இந்தியா தனித்தனியாகப் பார்க்காது என்பதைத் தெளிவுபடுத்தினோம்.
இன்று, இந்தியா புதிய கண்டுபிடிப்புகளின் பாதைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் புதிய ஊடுருவல் பாதைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா சிப் (chip) வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வடிவமைப்பதில் மூழ்கியுள்ளது.
இந்தியா உலகிற்கு மென்பொருளை (software) வழங்குகிறது, ஆனால் பாகிஸ்தான் 'ஸ்லீப்பர் செல்' (sleeper cells) எனப்படும் மறைமுக பயங்கரவாதக் குழுக்களை வழங்குகிறது. இந்தியா தரவு மையங்களை (data centres) உருவாக்குகிறது, அதே சமயம் பாகிஸ்தான் தீவிரவாத மையங்களை உருவாக்குகிறது. இந்தியா யுபிஐ மூலம் உலகை இணைக்கிறது, ஆனால் பாகிஸ்தான் ஹவாலா மூலம் பயங்கரவாதத்தை இணைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், நமது பாதைகள் வெவ்வேறானவை.
இத்தகைய சூழலில், தனது தீய நோக்கங்களுடன் பாகிஸ்தான் நமது முன்னேற்றத்திற்குத் தடையாக வந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க நமது ஆயுதப் படைகள் தயாராக உள்ளன.
அரசின் முயற்சிகள் மட்டுமே போதுமானவை அல்ல. நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களின் பணி மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். 2047-க்குள் 'வளர்ந்த இந்தியாவை' உருவாக்கும் இலக்கை நோக்கி நாம் அனைவரும் பயணித்து வருகிறோம். அதற்காக தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒவ்வொரு துறையிலும், கார்கில் போர் தியாகிகளைப் போலவே நாமும் அதே அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்” என்றார்.