புது டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி இன்று சந்தித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் திமுக எம்.பி வில்சன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக திமுக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களான கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்திந்த கனிமொழி, “ இன்று திமுக எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தி ஒரு தீர்மானத்தை வெளியிட்டோம். அதன்படி தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளோம். அதனை ஒட்டியே இன்றைய சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் எங்கள் எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவரிடம் விளக்கினோம்.
2024ம் ஆண்டிலேயே நாட்டில் முதன்முறையாக தொகுதி மறுவரையறை குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும், தமிழகம் பாதிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டது. அதன்பின்னர் 5 மாநில முதல்வர்கள், அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அதில் தொகுதி மறுவரையறை வேண்டாம் என சொல்லவில்லை, நியாயமான மறுவரையறை வேண்டும். அனைத்து மாநிலங்களின் இடங்களையும் 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தோம்.
கடந்த முறை கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவில் 2011 கணக்கெடுப்பின்படி நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டது. அவ்வாறு செய்யப்பட்டால் தமிழகத்தில் எம்.பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 32 ஆக குறைந்திருக்கும், இதனால் நாங்கள் அப்போது எதிர்த்தோம். இப்போது 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நடத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதன்படி தமிழகத்துக்கு 59 எம்.பிக்கள் கிடைப்பார்கள்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி, பாதிக்கப்படக்கூடிய அனைத்து மாநிலங்களின் உரிமையையும் பெற்று தந்த மகிழ்ச்சியோடு இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். காங்கிரஸும் நியாயமான தொகுதி மறுவரையறையைத்தான் கேட்டு வந்தது. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. திமுகவின் வீரத்தால்தான் இன்று நியாயமான தொகுதி மறுவரையறை கிடைத்துள்ளது” என்றார்.
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.